சம்பா நெல் பயிரில் பூச்சி, நோய் மேலாண்மை

சம்பா நெல் பயிரில் பூச்சி, நோய் மேலாண்மை

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிரில் பூச்சி மற்றும் மேலாண்மை குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளார் வேளாண்மை இணை இயக்குநர் சந்திரன்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிரில் பூச்சி மற்றும் மேலாண்மை குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளார் வேளாண்மை இணை இயக்குநர் சந்திரன்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நடப்பு சம்பா பருவத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் பயிரானது 3,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வானிலை காரணமாக சம்பா பயிரில் இலைப்பேன் தாக்குதல் தென்படுகிறது.  
இதை அறிய நாற்றங்கால் மற்றும் வயலில் ஒரு ஈரமான வெள்ளை துணி அல்லது ஈரமான கையினால் நெல் நாற்றுகளை வருடும் போது, சிறிய கருப்பு நிற பூச்சிகள் ஒட்டினால் இலைபேனால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியும்.
இப்பூச்சியின் தாக்குதல் அதிகம் இருந்தால், மோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி அல்லது பிப்ரோனில் 1.5 மி.லி அல்லது இமிடாகுளோர்பிட் 0.5 மி.லி இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். இலைசுருட்டுப்புழு தாக்குதல் தென்பட்டால் புரபனோபாஸ் ஏக்கருக்கு 400 மில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவும். மேலும், வயலில் பறவை தாங்கிகள் (பறவைகள் உட்கார கூடிய டி வடிவ தாங்கிகள்) அமைப்பதன் மூலம் இலை சுருட்டுப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். பாக்டீரியா இலைகருகல் நோய் மற்றும் இலை கீறல் நோய்கள் வர வாய்ப்புள்ளது.
இதைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 20 சதவீத பசுஞ்சாணக் கரைசலை நோய் அறிகுறி தென்பட்ட உடன் ஒரு முறையும், 15 நாள்களுக்கு பிறகு ஒரு முறையும் (40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து இரவு முழுவதும் ஊறவைத்து தெளிந்த நீருடன், 100 லிட்டர் தண்ணீரில் சேர்த்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கவும்).
அல்லது காப்பர் ஹைட்ராக்ஸ்சைடு 500 கிராம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். விவசாயிகள் பூச்சி அல்லது நோயைக் கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும்போது, அவசியம் ஒட்டும் திரவத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற வீதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com