பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 3.60 கோடியில் 227 பண்ணைக் குட்டைகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 3.60 கோடியில் 227 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 3.60 கோடியில் 227 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
வேப்பந்தட்டை ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில், தேவநதி ஓடையின் குறுக்கே தலா ரூ. 1.80 லட்சத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 4 தடுப்பணைகளையும், நீர் செறிவூட்டும் அமைப்பையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறை மூலம் அன்னமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் தனிநபர் இல்லக் கழிப்பறைகளை பார்வையிட்டு, அவற்றின் பயன்பாடுகளை விளக்கினார்.
தொடர்ந்து, ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு அமைக்கப்பட்டுள்ள ஆண்கள் சுகாதார வளாகத்தைப் பார்வையிட்டு, அவற்றை சீரமைக்கவும், மகளிருக்கு தனி சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் அவர் கூறியது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் ரூ. 3.60 கோடியில் 227 பண்ணைக் குட்டைகள் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றித்தில் மட்டும் 142 பண்ணைக் குட்டைகள் ரூ. 221.35 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தடுப்பணைகளில் சேகரிக்கப்படும் மழைநீர் விரைவாக நிலத்தடிக்கு சென்று சேரும் வகையில் நீர் செறிவூட்டும் அமைப்பு தலா ரூ. 15 ஆயிரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தடுப்பணைகளில் சேர்ந்துள்ள மழைநீர் விரைவாக நிலத்தடிக்கு சென்று நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர வழிவகை செய்யும் என்றார் ஆட்சியர்.
ஆய்வின்போது, மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை துணை இயக்குநர் அண்ணாதுரை, ஊராட்சிகள் உதவி இயக்குநர் லோ. பாலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஸ்ரீராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதாஸ், மணிவாசகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com