"தனிநபர் இல்லக் கழிப்பறைகளை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்'

தனிநபர் இல்லக் கழிப்பறைகளை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆட்சியர் வே. சாந்தா.

தனிநபர் இல்லக் கழிப்பறைகளை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட நக்கசேலம், சிறுவயலூர் ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள்,  திறந்தவெளி மலம் கழிப்பிடமற்ற ஊராட்சியாக மாற்றும் நோக்கில் பொதுமக்களின் இல்லங்களில் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்ல கழிவறைகளுக்கான கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மேலும் கூறியது:  
நக்கசேலம்,  சிறுவயலூர் ஆகிய ஊராட்சிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த  கழிவறை வசதிகள் இல்லாதவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அரசு வழங்கும் ரூ. 12 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, நக்கசேலம் ஊராட்சியில் ரூ. 93,96,000 மதிப்பீட்டில் 783 இல்லங்களில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 634 கழிப்பறைகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 149 தனிநபர் இல்லக் கழிப்பறைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறுவயலூர் ஊராட்சியில் ரூ. 81,12,000 மதிப்பீட்டில் 676 இல்லங்களில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
453 பணிகள் முடிக்கப்பட்டு, 223 தனிநபர் இல்லக் கழிப்பறைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தலா ரூ. 2,10,000 மதிப்பீட்டில் நக்கசேலம் ஊராட்சியில் 1 பசுமை வீடும், சிறுவயலூர் ஊராட்சியில் 2 பசுமை வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் அனைவரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்துகொள்வது அவசியமாகும். மனிதர்களுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு திறந்தவெளியில் மலம் கழிப்பதே காரணமாகும் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசு வழங்கும் ரூ. 12 ஆயிரத்தை பயன்படுத்தி தங்களது இல்லங்களில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் அமைக்க முன்வர வேண்டும். மேலும், அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா.
 ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர்,  செயற்பொறியாளர் ஜோஸ்பின் நிர்மலா, உதவி செயற்பொறியாளர் குருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி. தயாளன், சா. இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com