சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட விவசாயிகள் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட விவசாயிகள் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  
பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கு தோட்டக்கலை பயிர்களான காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், மலர்கள் மற்றும் நறுமணப் பயிர்களில் குறைந்தளவு நீரைக்கொண்டு, அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்வதற்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து சாகுபடி செய்வதே சிறந்ததாகும். இத்திட்டத்தின் மூலம் 30 - 40 சதவீதம் நீர் சேமிக்கப்படுவதோடு, 20 -25 சதவீதம் கூடுதல் மகசூல் பெறவாய்ப்புள்ளது. 20 சதவீதம் உரச் செலவை குறைக்க முடியும். சொட்டு நீர்ப் பாசனத்தின் மூலம் நீர் பாய்ச்சும் போது சொட்டுவான்கள் மூலம் செடிகளின் வேர்ப்பகுதிகளில் மட்டும் நீர் சொட்டுவதால் நீர் வீணாவது தவிர்க்கப்படுகிறது. செடிகளின் வளர்ச்சி ஒரே சீராக இருப்பதோடு, களைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.
மத்திய, மாநில அரசு வழிகாட்டுதலின் படி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்த 1,530 ஹெக்டேருக்கு ரூ. 1,024 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டேர் வரை மானியம் அனுமதிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களது நிலத்துக்கான கணினி சிட்டா, அடங்கல், வயல் வரைபடம், குடும்ப, ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, மண் மற்றும் நீராய்வு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாக அல்லது ‌w‌w‌w.‌t‌n‌h‌o‌r‌t‌ic‌u‌l‌t‌u‌r‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/‌h‌o‌r‌t‌i/‌m‌i‌m‌i‌s எனும் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். 
மேலும், சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ. 1.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
நீர்ப்பாசன வசதியுள்ள, தகுதியுள்ள ஆதிதிராவிட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com