நிவாரணம் கோரி பூச்சிக்கொல்லியால்  பாதிக்கப்பட்டோர் ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி தெளித்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில்

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி தெளித்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த விவசாயிகள் நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், ஓலைப்பாடி, சித்தளி கிராமங்களைச் சேர்ந்த நல்லபெருமாள், பழனிவேல், அழகுதுரை, பிரபாகரன், பிச்சைபிள்ளை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
பருத்தி வயலுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி தெளித்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் ரூ. 1 லட்சம் செலவழித்து சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளோம். வறுமையில் வாடும் எங்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்கான செலவு உள்பட மறுவாழ்வுக்குத் தேவையான தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும்.
இதேபோல, பருத்தி செடிக்கு ரசாயன பூச்சிக்கொல்லி தெளித்தபோது ஆலத்தூர் வட்டம், பி.கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் (55)  அண்மையில் உயிரிழந்தார். அவரது மனைவி சரஸ்வதி (49) அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: 
பருத்தி செடிக்கு பூச்சிக்கொல்லி தெளித்தபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எனது கணவர் உயிரிழந்தார். இதனால் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளேன். மேலும், விவசாயம் சாகுபடிக்காக வாங்கிய ரூ. 5 லட்சம் கடனையும் செலுத்த முடியவில்லை. எனவே, எனது குடும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, தமிழக அரசிடம் இருந்து நிவாரணம் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். 
ஏரியை தூர்வார வலியுறுத்தல்:பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் காலி குடிநீர் பாட்டில்களை மாலையாக அணிந்து, மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள லப்பைக்குடிகாடு ஏரி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. 
இதனால், ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளந்து ஏரியின் தண்ணீர் கொள்ளளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர் வளம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, கோடைகாலத்துக்கு முன்பு பராமரிப்பின்றி கிடக்கும் ஏரியை தூர் வாரி, கரை மற்றும் வரத்து வாய்க்கால்களை சீரமைத்து அதன் நீர்கொள்ளளவை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com