நெற்பயிரில் நோய்த் தாக்குதல்; அலுவலர் குழு ஆய்வு

பெரம்பலூர் வட்டாரத்தில் வேளாண் அலுவலர்  குழுவினர் நெற்பயிர்களில் நோய் தாக்குதல் குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

பெரம்பலூர் வட்டாரத்தில் வேளாண் அலுவலர்  குழுவினர் நெற்பயிர்களில் நோய் தாக்குதல் குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக 7,500 ஹெக்டேரில் சகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தூர்கட்டும் பருவம் முதல் பால் பிடிக்கும் தருணத்தில் உள்ளது. அண்மையில் பெய்த மழையாலும், தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையாலும் நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் கீதா, வேளாண் அலுவலர் பிரேமா, தோட்டக்கலை அலுவலர் பெரியசாமி, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் தொழில்நுட்ப வல்லுநர் திவ்யா ஆகியோர் கொண்ட குழுவினர் குரும்பலூர், அரணாரை, ரெங்கநாதபுரம் ஆகிய கிராமங்களில் வயல்வெளி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், தானிய நிறமாற்ற நோய், இலைச் சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் ஈ ஆகிய நோய் மற்றும் பூச்சியின் சேதமிருப்பது தெரியவந்தது.
இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து, வேளாண் குழுவினர் கூறியது:
தானியம் நிறமாற்ற நோய் தாக்கிய செடிகளின் மணிகள் அடர் பழுப்புநிறம் அல்லது கருப்புநிறப் புள்ளிகளாக தானியங்கள் மீது தோன்றும். இதைக் கட்டுப்படுத்த அதிகளவு நைட்ரஜன் உரங்கள் அளிப்பதைத் தவிர்க்கவும். மேலும், கதிர் பூக்கும் பருவத்தில் கார்பண்டாசிம் மற்றும் மேன்கோசெப் (1:1) 0.1 சதவீதம் அல்லது அசாக்சிகுரோபின் 0.1 சதம் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 
ஆனைக் கொம்பன் ஈ தாக்குதலின் அறிகுறியாக புழுக்கள் வளரும் தூர்களைத் தாக்குவதால், தாக்கப்பட்ட தூர்களில் நெற்கதிர் வராது. மேலும், வளர்ச்சிக்குன்றி காணப்படும். வெங்காய இலைபோல அல்லது வெள்ளித் தண்டுபோல காட்சியளிக்கும்.  இதைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறி ஏக்கருக்கு ஒன்று வைக்கவும்.  தாக்குதல் பொருளாதார சேத நிலையான 10 சதத்திற்கும் மேல் தென்பட்டால் பைப்ரனில் 0.3 சதவீத குருணை மருந்தை ஏக்கருக்கு 10 கிலோ தேவையான மணலுடன் கலந்து விசிறி கட்டுப்படுத்தலாம்.
இலைச்சுருட்டுப் புழு தாக்குதலின் அறிகுறியாக இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டிருக்கும்.  புழுக்கள் இலைகளின் பச்சைநிறத் திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறிக் காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்ததுபோலக் காட்சியளிக்கும். இலைகள் நீள்வாட்டில் சுருண்டு புழுக்கள் அதனுள்ளே இருக்கும். இதைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மா சைலானிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்த 37- 44 மற்றும் 51 நாள்களில் மொத்தம் 3 முறை விட வேண்டும். வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் தாக்குதல் குறைவாக இருக்கும்போது தெளிக்கலாம். அதிகத் தாக்குதல் தென்பட்டஈநால் புளுபென்டிமைட் 39.35 சதம் எஸ்.சி 0.03 சதம் அல்லது தையோமீதாக்சம் 25 சதம் ஒரு ஹெக்டேருக்கு 100 கிராம் அளவு தேவையான தண்ணீரில் கலந்துதெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com