வி.ஏ.ஓ அலுவலகத்தை இடம்மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட ராமலிங்கபுரம், ரசலாபுரம், மாக்காய்குளம், அருணகிரிமங்களம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
மேற்கண்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த பல ஆண்டுகளாக ரசலாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் பெறவும், கையொப்பம் பெறவும் கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொண்டு வருகிறோம்.
இந்நிலையில், ரசலாபுரத்தில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை, நொச்சிக்குளம் கிராமத்துக்கு இடமாற்றம் செய்வதாக அரசு அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இடமாற்றம் செய்யும் பட்சத்தில் பொது மக்களுக்கு காலவிரயமும், மாணவ, மாணவிகளுக்கு தேவையற்ற அலைச்சலும் ஏற்படும். எனவே, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை நொச்சிக்குளம் கிராமத்துக்கு இடமாற்றம் செய்வதை தவிர்த்து, மீண்டும் ரசலாபுரம் கிராமத்திலேயே செயல்பட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com