பிறப்பு, இறப்புகளை பதியும்போது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர்

பிறப்பு, இறப்புகளை பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு.  

பிறப்பு, இறப்புகளை பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு.  
பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:  
பொதுமக்கள் தங்களது உறவினர்களின் பிறப்பு, இறப்புகளை முறையாக பதிவு செய்துகொள்வது மிகவும் அவசியமானது. இதன்மூலம் பிற்காலத்தில் அவர்களுக்கு தேவைப்படும் பாஸ்போர்ட், பள்ளி சேர்க்கை மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெற மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும், பிறப்பு, இறப்புகளை பதியும்போது ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பதிவுகளை, அந்தந்த அரசு மருத்துவமனைகளிலும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்குள்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்திலும், இதரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கிராம நிர்வாக அலுவலகத்திலும் குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பதிய வேண்டும்.  
இவ்வாறு பதியும்போது, குழந்தைகளின் பெயர்களில் அல்லது பெற்றோரின் பெயர்களில் பதிவு செய்துகொள்ளலாம். பெற்றோர் பெயர்களில் பதியாத குழந்தைகளுக்கு, ஓராண்டுக்குள் பெயர் சூட்டி பிறப்புப் பதிவேட்டில் பதிய வேண்டும். ஓராண்டுக்குள் பதியாத குழந்தைகளின் பிறப்புகளை, வட்டாட்சியரகம் சென்று அதற்குரிய தொகையை செலுத்தி பதியலாம்.
இதுபோன்ற நடைமுறையைப் பின்பற்றி தங்கள் உறவினர்களின் இறப்புப் பதிவையும் மேற்கொள்ளலாம். அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கும், பாகப்பிரிவினை உள்ளிட்டவற்றுக்கும் பிறப்பு, இறப்பு பதிவது மிகவும் இன்றியமையாதது.
எனவே அனைத்துப் தரப்பு மக்களும் பிறப்பு, இறப்பு பதிவுகளை பதிவு செய்ய, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் காலம் தாழ்த்தாமல் பிறப்பு, இறப்பு குறித்த விவரங்களை முறையாக பதிய முன்வர வேண்டும் என்றார் வேலு.
சுகாதார பணிகள் உதவி இயக்குநர் கரோலின் பானுமதி, வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், தமிழரசன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com