ஏரியை தூர்வாரும் கிராம மக்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே கிராம மக்கள் ஒன்றிணைந்து ஏரியை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளனர்.  

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே கிராம மக்கள் ஒன்றிணைந்து ஏரியை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளனர்.  
நீர் ஆதாரங்களான ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி உள்ளதால், தற்போது நிலவும் கடுமையான வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீர் ஆதாரங்களை முறையாக பராமரிக்க தவறியதால் குடிநீர் தட்டுப்பாடு, உயிரினங்கள் இழப்பு என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பாதிப்புகளில் இருந்து மீளவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், அயினாபுரம் கிராமத்தில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராமல் கிடந்த வன்னேரியை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள்  மாவட்ட நிர்வாகம், சட்டப்பேரவை உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், ஏரியை சீரமைக்க தேவையான பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்த நிலையில், நீர்நிலைகளின் முக்கியத்தை உணர்ந்த கிராம மக்கள் அயினாபுரம் வெளிநாடு வாழ் நண்பர்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏரியை தூர்வார முடிவெடுத்தனர். அதன்படி, அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பணம் வசூலிக்கப்பட்டு, கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏரியை தூர்வாரும் பணி தொடங்கியது. ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் பணியின் முதல் கட்டமாக, ஏரிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் மற்றும் இதர குப்பைகள் அகற்றப்பட்டு, ஏரி தூர்வாரப்பட்டு அந்த மண்ணை வைத்து கறைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், ஏரியின் கொள்ளளவு அதிகரித்து நீர்தேக்கும் வசதி அதிகரிக்கும். ஏரியில் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்வதால் சுகாதாரச் சீர்கேடு தவிர்க்கப்படுவதோடு அப்பகுதி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.
கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட இந்த ஏரி மூலம் கிராமப்புற மக்களும், கால்நடைகளும் பயனடைந்து வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து, வண்டல் மண் தேங்கியிருந்ததால் தண்ணீரை தேக்கி வைக்கும் அளவு குறைந்தது. இதனால், இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். தற்போது தூர்வாரப்படும் இந்த ஏரியால் அயினாபுரம் மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாவதோடு, இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது என்றனர் கிராம மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com