அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் மனு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த பெண்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பி. பாஸ்கரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
ஊத்தங்கால் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். நியாயவிலைக்கடை இல்லாததால், சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று, தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி வருகின்றனர். மேலும், மயான வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி தரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், தற்போது நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டால் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று கிணறுகளில் உள்ள தண்ணீரை கொண்டுவந்து பயன்படுத்தி வருகிறோம். எனவே, எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரும்பாபாளையத்தில்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள குரும்பாபாளையம் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் அளித்த  மனுவில் தெரிவித்திருப்பதாவது:
குரும்பாபாளையம் கிராமத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள மக்களின் வசதிக்காக ஆலத்தூர் ஒன்றியக்குழு உறுப்பினர் கர்ணன், மேல உசேன் நகரத்தில் ஒப்பந்தத்தின் மூலம் ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்தார். அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால், அந்த ஆழ்துளை கிணற்றுக்கு மாதம்தோறும் ரூ. 1,500 மின் கட்டணம் செலுத்தி வருகிறோம்.
தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் வெளியூர்களிலிருந்து அதிக விலைக்கு தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com