கடன் தள்ளுபடியாக வாய்ப்பில்லை: கடனைச் செலுத்தி, பிணையஆவணங்களைப் பெற அழைப்பு

தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் (என்.எஸ்.எப்.டி.சி), தேசிய துப்புரவுப் பணியாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் (என்.எஸ்.கே.எப்.டி.சி)

தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் (என்.எஸ்.எப்.டி.சி), தேசிய துப்புரவுப் பணியாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் (என்.எஸ்.கே.எப்.டி.சி) திட்டங்களில் கடன் பெற்றவர்கள், கடன் மற்றும் வட்டியைச் செலுத்தி பிணையம் செலுத்தியுள்ள ஆவணங்களைத் திரும்பப் பெற்று கணக்கை முடித்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.  
இதுகுறித்த செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம், தேசிய துப்புரவுப் பணியாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ள ஆதிதிராவிட மக்கள், துப்புரவுப் பணியாளர்கள் தாங்கள் பெற்றுள்ள கடன் தள்ளுபடியாகும் எனக் கருதி, கடனைத் திரும்பச் செலுத்துவதில் தயக்கம் காட்டிவருகின்றனர். இக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டும் பயனில்லை. கடனைச் செலுத்தாமல் இருப்பதால், வட்டித் தொகை அதிகரிப்பதோடு கடனுக்கு ஈடாக தாட்கோ அலுவலகத்தில் வைத்துள்ள பிணையப் பத்திரங்களையும் மீட்க இயலாத நிலை உள்ளது.
அரசாணைப்படி ஆதிதிராவிடர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் என்.எஸ்.எப்.டி.சி மற்றும் என்.எஸ்.கே.எப்.டி.சி திட்டத்தில் கடன் பெற்றுள்ளவர்கள், அசல் மற்றும் வட்டியை ஒரே தவணையில் அல்லது மூன்று சம தவணைகளில் செலுத்த எழுத்துப் பூர்வமாகச் சம்மதித்தால், அபராத வட்டியைத் தள்ளுபடி செய்திடவும், கடனுக்கு ஈடாக வைத்துள்ள பிணையப் பத்திரங்களை உடனடியாக பயனாளிக்கு வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com