கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வீணாவது தடுக்கப்படுமா?

குடிநீர் வீணாவதை தடுக்க, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.  

குடிநீர் வீணாவதை தடுக்க, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.  
கடந்த 2003- 04-ல் பெரம்பலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி மற்றும் வழியோர கிராமங்கள் உள்பட 116 கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். 2ஆம் கட்டமாக 2007-ல் செயல்படுத்தப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 306 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது, 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 21- 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்ட நிலையில், தற்போது 17 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.  இதனால், நகராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போதிய தண்ணீரின்றி அவதிக்குள்ளாகி வருவதோடு, குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி காலிக்குடங்களுடன் ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சேதமடைந்த குழாய்கள்:  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு செல்லும் பிரதான குழாய்களும், குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் குழாய்களும் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன.
இதன்மூலம், வெளியேறும் தண்ணீர் சாலைகளிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் வழிந்தோடுகிறது. நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சேதமடைந்த குழாய்களை, அவ்வப்போது நகராட்சி நிர்வாகம் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால், இதர பகுதிகளில் சேதமடைந்துள்ள குழாய்களை சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, விளாமுத்தூர் சாலை, செஞ்சேரி பிரிவு சாலை, செட்டிக்குளம், எசனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதான குழாய்களில் இருந்து பல மாதங்களாக தண்ணீர் வெளியேறுகிறது.
மேற்கண்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை பொதுமக்கள் சிலர் குடிப்பதற்காக பிடித்து செல்கின்றனர். பல இடங்களில் கால்நடைகளை கழுவுவதற்காகவும், சிறுவர்கள் குளிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கொள்ளிடம் கூட்டு குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாதது வேதனை அளிக்கிறது என கூறுகின்றனர் பொதுமக்கள். எனவே, சேதமடைந்த குழாய்களை சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீர் தட்டுப்பாட்டை களைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com