"குடும்ப உறவுகளை இனிக்க  செய்தவர் கவிஞர் கண்ணதாசன்'

குடும்ப உறவுகளை இனிக்கச் செய்தவர் கவிஞர் கண்ணதாசன் என அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் க. தமிழ்மாறன் பேசினார்.

குடும்ப உறவுகளை இனிக்கச் செய்தவர் கவிஞர் கண்ணதாசன் என அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் க. தமிழ்மாறன் பேசினார்.
பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமம் சார்பில், கண்ணதாசன் படைப்புகள் மதிப்பீட்டரங்கு, பெரம்பலூரில் ஞயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
ஆன்மீகக் கருத்தைத் தனது படைப்புகளில் எளிமையாக வெளிப்படுத்தியவர் கவிஞர் கண்ணதாசன். காதல், வீரம், தத்துவம், பக்தி என அவரது படைப்புகள் உலகம் உள்ளவரை நிலைக்கும். அர்த்தமுள்ள இந்துமதம் வாயிலாக இந்துமத மாண்புகளை மிளிரச் செய்தவர். கிறிஸ்தவர்களின் வேத நூலாகிய விவிலியத்தை இயேசு காவியம் என கவிதையாய்த் தந்தவர்.
 தமிழ்த் திரையுலகைத் தன் உள்ளங்கையில் கால்நூற்றாண்டு வைத்திருந்தார். தனது பேனா முனையைச் சங்க இலக்கியத்தில் தோய்த்துக் கொண்டார். குடும்ப உறவுகளைத் தனது சொற்களால் இனிக்கச் செய்தவர். காதல் இன்பத்தையும், சோகத்தையும் எழுதுவதில் கண்ணதாசனை விஞ்ச முடியாது. தமிழ்க் காதுகளின் குழலிசை - கருத்துகளின் யாழிசை. உலக உருண்டையின் வான் காற்றில் கண்ணதாசன் என்றென்றும் உலா வந்துகொண்டே இருப்பார் என்றார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியர் பெ. ஆறுமுகம், கண்ணதாசனின் படைப்புகளின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
 சென்னை ராணி மேரி கல்லூரியின் தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர் த. ராஜ்குமார் முன்னிலையில், வரலாற்று ஆய்வாளர் ஜெயபால், சீனிவாசன் இருபாலர் கலை அறிவியல் கல்லூரியின் உதவி தமிழ் பேராசிரியர் த. மாரிமுத்து, தலைமை ஆசிரியர்கள் மலர்க்கொடி, பெ. நடராஜன், முனைவர் பெரியசாமி, புலவர் கூத்தரசன், கவிஞர்கள் முத்தரசன், அகவி, சுரேஷ்குமார், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி. தங்கராசு  உள்ளிட்டோரும் பங்கேற்று, பேசினர்.  
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மு. முத்துமாறன் வரவேற்றார். அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் மதன்ராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com