சின்னவெங்காயம் நடவுப் பணி மும்முரம்: நிகழாண்டில் சாகுபடி கடும் சரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையைத் தொடர்ந்து, விவசாயிகள் தங்களது வயலில் சின்ன வெங்காயம் நடவுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையைத் தொடர்ந்து, விவசாயிகள் தங்களது வயலில் சின்ன வெங்காயம் நடவுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 தமிழகத்திலேயே சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இதில்,  ஆலத்தூர் வட்டாரத்தில் உள்ள பாடாலூர், இரூர், ஆலத்தூர் கேட், காரை, தெரணி, நாரணமங்கலம், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், மாவலிங்கை, குரூர், சிறுவயலூர், டி.களத்தூர், அடைக்கம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் அதிகளவில்சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  நிகழாண்டில், இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் இறவை பயிராக 3,620 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  ஆண்டுதோறும் ஆலத்தூர் வட்டாரத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் வரை சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும். ஆனால், நிகழாண்டில் இதுவரை சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 பெரம்பலூர் மாவட்டத்தில், குறிப்பாக ஆலத்தூர் வட்டாரத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் நடவுப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் நடவு செய்ய சுமார் 600 கிலோ முதல் 700 கிலோ வரை விதை வெங்காயம் தேவைப்படுகிறது. விதை வெங்காயம் சுமார்  ரூ. 60 ஆயிரத்துக்கு வாங்க வேண்டிய சூழல், பல்வேறு விவசாயப் பணிகளுக்கு ரூ. 20 ஆயிரத்துக்கும் மேல் தேவைப்படுகிறது.
 இதுகுறித்து, சின்ன வெங்காயம் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியது:  
 தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய வேண்டும் என்றால் அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது. விதை வெங்காயத்தை கிலோ ரூ. 140-க்கு விலை கொடுத்து வாங்கி நடவுசெய்ய வேண்டியுள்ளது.
 உரங்களின் விலையேற்றம், கூலி உயர்வு, ஆள்கள் கிடைக்காத நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிகழாண்டில் சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பளவு குறையும் வாய்ப்புள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com