தடை செய்யப்பட்ட பி.டி ரக பருத்தியை  பயிரிட வேளாண் துறை பரிந்துரை?

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான கருத்தரங்கில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பி.டி ரக பருத்தி விதையைப் பயிரிடலாம் என வேளாண் துறையினர் பரிந்துரை செய்தனர்.

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான கருத்தரங்கில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பி.டி ரக பருத்தி விதையைப் பயிரிடலாம் என வேளாண் துறையினர் பரிந்துரை செய்தனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில் பெரம்பலூர், திருச்சி, கடலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் பெரம்பலூர் நான்குசாலை சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசியது:
தமிழக அளவில் மானாவாரி பயிரான பருத்தி மற்றும் மக்காச்சோள சாகுபடியில், பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கமான மழை அளவான 791 மி.மீட்டரை விட, நிகழாண்டு இதுவரை 816 மி.மீட்டர் பெய்துள்ளது. கடந்த ஆண்டை (20, 996 ஹெக்டேர்) விட நிகழாண்டில் 33,402 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொடர்ந்து, பருத்தி சாகுபடி, விளைச்சல், பராமரிப்பு, உற்பத்தி பெருக்கம் குறித்து குறும்படம் மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பி.டி ரக பருத்தி விதையை அனைவரும் பயிரிடலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலர் ஆர். ராஜாசிதம்பரம் கூறியது:  தரம் குறைவான பருத்தி என தமிழக அரசால் தடை செய்யப்பட்டு, விற்பனை நிறுத்தம் செய்யப்பட்ட பி.டி ரக பருத்தி விதையை பயிரிட,  அரசு அலுவலர்களே பரிந்துரை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. பி.டி ரக பருத்தி உற்பத்தித் திறன் குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர்.
விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ. வேணுகோபால் கூறியது: இந்த கருத்தரங்கில் பருத்தியின் நோய் தாக்கத்தை குறித்தும், அதை பாதுகாப்பது குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை என்றார் அவர்.  இதில், வேளாண் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com