பருத்தியில் வாடல் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்தியில் ஏற்பட்டுள்ள வாடல் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார்

பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்தியில் ஏற்பட்டுள்ள வாடல் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) ஜெ. கதிரவன்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பருத்தி பயிரானது சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக, பருத்தியை தாக்கும் நோய்களில் குறிப்பாக மண் மூலம் பரவும் நோய்களான பியுசேரியம் வாடல் நோய் பரவி வருகிறது. இந்நோய், பியுசேரியம் ஆக்ஸிஸ்போரம் என்ற தீங்கு விளைவிக்கும் பூஞ்சாண நுண்ணுயிரிகளால் ஏற்படுத்தப்படுகிறது. பூக்கும் பருவத்தில் இலைகளில் இந்நோயின் தாக்குதல் தென்படும். இலைகளின் ஓரங்களில் மஞ்சளாக மாறி பிறகு அடர் பழுப்பு நிறமாக உள்நோக்கி நகர்ந்து இறுதியில் இலைகள் வாடி கொட்டி விடுகின்றன.  
நோய் தாக்கிய பருத்தி செடிகள் சிறிய காய்களுடன் முன்னதாகவே முதிர்ந்து வெடித்துவிடும் அபாயம் உள்ளது. பாதிக்கப்பட்ட வேருக்கும், தண்டு பகுதிக்கும் இடையில் குறுக்காக வெட்டி பார்க்கும்போது, அதில் அடர் சிவப்பு நிற கோடுகளோ அல்லது வளையங்களோ காணப்படும். வளர்ச்சி பருவத்தின் போதும் நீண்ட மழையில்லாத வறண்ட சூழ்நிலைக்குப் பிறகும், மழை பெய்தால் இந்நோயின் தாக்குதல் தீவிரமாகி செடிகள் வாடி இறக்க நேரிடும்.  
நோய் தாக்குதலின் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, ரசாயன பூஞ்சாணக் கொல்லிகளான கார்பன்டாசிம் அல்லது குளோரோதலானில் அல்லது ட்ரேபுளோசிஸ்ரோபின் 10 டெபுகோனசோல் 1 கிராம் அல்லது டெபுகோனாசோல் 1 மில்லி இவற்றில் ஏதாவது ஒன்றை 1 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து, வேர் பகுதியில் நோய் தாக்கிய மற்றும் அருகிலுள்ள செடிகளுக்கு ஊற்றுவதுடன் இலைவழியாக தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com