"இளம்வயது திருமணங்களை தடுக்க வேண்டும்'

பெரம்பலூர் மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

பெரம்பலூர் மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:  
எடைக்குறைவான குழந்தைகளுக்கு மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி, கடுமையான எடைக்குறைவு குழந்தைகளுக்கு மாற்று உணவு வகைகள், இணை உணவுடன் தானியங்கள், பயறு வகைகள் வழங்க வேண்டும். இதற்காக, உணவு அட்டை பராமரிக்க வேண்டும். தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும்போது வழங்கப்படும் அரசின்  உதவித்தொகை, உரிய நேரங்களில் வழங்குவதால் கர்ப்பகாலத்திலேயே சத்தான உணவு பெற முடியும்.
மக்கள் தொகையை குறுக்காய்வு செய்யும்போது, வேப்பந்தட்டை வட்டாரத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இதர வட்டாரங்களில் இந்த எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்யவேண்டும். சரியான எடையுள்ள குழந்தைகளை பெற்றெடுக்க தாய்க்கு தரமான ஊட்டச்சத்து, சரியான திருமண வயது இருக்க வேண்டும். இளம் வயது திருமணம் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.  பெண் சிசுக்கொலை நடைபெறுவதைத் தடுக்க வேண்டும்.
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு தகவல் தொடர்பு கல்வி அளித்து, அவர்களது மனநிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இந்த தகவல் தொடர்பு கல்வியை, பள்ளிக் குழந்தைகள் அளவில் இருந்தே தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இதுகுறித்து, சுவர் விளம்பரங்களை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்ட வேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா.
கூட்டத்தில், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மகளிர் திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ச. பூங்கொடி, பொது சுகாதார துணை இயக்குநர் ச. சம்பத், ஊராட்சி உதவி இயக்குநர் பாலன், முதன்மை கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com