பொது கழிவறையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

வாலிகண்டபுரத்தில் கடந்த 2 மாதங்களாக பூட்டி கிடக்கும் ஒருங்கிணைந்த ஆண்கள் பொது கழிவறையை திறந்து, அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர

வாலிகண்டபுரத்தில் கடந்த 2 மாதங்களாக பூட்டி கிடக்கும் ஒருங்கிணைந்த ஆண்கள் பொது கழிவறையை திறந்து, அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட வாலிகண்டபுரத்தில் கடந்த 2013-இல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ. 4.95 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஆண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதை, அங்குள்ள பதிவாளர் அலுவலகம், மின்வாரிய அலுவலகம், துணை அஞ்சல் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையத்துக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான ஆண்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த சுகாதார நிலையத்தைப் பராமரிக்க, அங்கு வரும் நபர்களிடம் ரூ. 1 முதல் ரூ. 2 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு முறையாக சுத்தப்படுத்தி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பயன்பாடின்றி மூடிக்கிடக்கிறது. இதனால், மேற்கண்ட அலுவலகங்களுக்கு வரும் ஆண்களும், அரசு அலுவலர்களும் கழிவறை வசதியின்றி பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.  மேலும், அப்பகுதியில் கழிவறை வசதி இல்லாததால் திறந்தவெளி பகுதியே கழிவறைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், பயன்பாடின்றி உள்ளதால் அங்குள்ள தளவாடப் பொருள்கள் சேதமடைந்து வருகின்றன. எனவே, சேதமடைந்துள்ள பொருள்களை சீரமைத்து, ஆண்களுக்கான பொது கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராமம்தோறும் தனிநபர் இல்லக் கழிவறைகள் அமைக்க முயற்சித்து வரும் மாவட்ட நிர்வாகம், முறையான பராமரிப்பின்றி காணப்படும் இதுபோன்ற கழிவறைகளை சீரமைத்து, அவற்றை பராமரிக்க முயற்சிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com