அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நோயாளிகள் அலைக்கழிப்பு

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கான சீட்டு கேட்டு அலைக்கழிக்கப்படுவதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கான சீட்டு கேட்டு அலைக்கழிக்கப்படுவதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு  காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க சுமார் 20  படுக்கைகளுடன் கூடிய காய்ச்சல் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
தனியாக சிகிச்சை மையம் இருந்ததாலும், காய்ச்சலுடன் வரும் ஏழை நோயாளிகள் எளிதாக அனுமதிக்கப்படுவதில்லை. அரசு மருத்துவமனைக்கு காய்ச்சலுடன் வரும் நோயாளிகளிடம் புறநோயாளிகள் சீட்டு கேட்டு தொந்தரவு செய்யாமல் உடனடியாக அவர்களை அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சீட்டு வாங்கிய பின்னரே காய்ச்சலால் பாதித்த நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், புறநோயாளிகள் பிரிவில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறைவான படுக்கைகள்:
சேலம் மாவட்டத்தில் அதிகளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், பெரம்பலூர்- சேலம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான வேப்பந்தட்டை வட்டாரத்திலும் அதிகளவு டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போதிய படுக்கை வசதியில்லாததால் தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். மேலும், ஒரே படுக்கையில் 2-க்கும் மேற்பட்ட நோயாளிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  
படுக்கை வசதிக்கு ரூ. 20 கட்டணம் வசூல்:  
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிக்காக ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப்படுவதாக நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.  இருப்பினும் நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதுகுறித்து  சம்பந்தப்பட்ட ஊழியரிடம் கேட்டால் தகாத வார்த்தைளால் திட்டுகிறாராம்.
பல இன்னல்களுக்கும், சிரமத்துக்கும் ஆளாகும் காய்ச்சலால் பாதித்த நோயாளிகளில் சிலர் அரசு மருத்துவமனையே வேண்டாம் என முடிவெடுத்து, தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுவிடுகின்றனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற விரும்பாமல், புறநோயாளிகள் பிரிவிலேயே சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர்.
இதுகுறித்து டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் உறவினர் ஒருவர் கூறியது:
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியில்லாததால் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம். ஆனால், இங்குள்ள ஊழியர்கள் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். போதிய படுக்கை வசதியில்லாமல் மருத்துவமனை வளாகத்தில் தங்கி சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. படுக்கை வசதிக்காக சீட்டு வழங்கும் இடத்தில் ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறினால் எந்த நடவடிக்கையும் இல்லை  என்றார் அவர்.
இதுகுறித்துக் கேட்க சுகாதாரத் துறை இணை இயக்குநர் செல்வராஜனை தொடர்புகொண்டபோது தொலைபேசி  அழைப்பை அவர் ஏற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com