வரத்து வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும்: பெரம்பலூர் விவசாயிகள் வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைநீரைச் சேமிக்க வரத்து வாய்க்கால்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைநீரைச் சேமிக்க வரத்து வாய்க்கால்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
 அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ்:
 பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பருத்தியில் வாடல் நோயும், மக்காச்சோளத்தில் அதிகப் புழுவும் காணப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும். அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறுவதால் பத்திர எழுத்தர்கள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதைக்  கட்டுப்படுத்த வேண்டும். கடந்தாண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்காத நிலையில், தற்போது மீண்டும் பயிர்க் காப்பீடு செய்ய அறிவுறுத்துவது வேதனையளிக்கிறது. மின் வாரியத்தில் பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் ஏற்படுவதைக் களைய வேண்டும். டெங்கு காய்ச்சலால் ஏழை, எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்தவும், கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்தப் பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும். மேலும், இரவு நேரங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இருக்க உத்தரவிட வேண்டும்.
திருவள்ளுவர் உழவர் மன்றத் தலைவர் கு. வரதராசன்:
 பூலாம்பாடி பகுதியில் உள்ள பச்சமலை அடிவாரத்தில் முட்புதர்களை அகற்றி வேம்பு, புங்கள், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகள், மாணவ, மாணவிகள் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்று நட வேண்டும், பூலாம்பாடி பாசன ஏரிகளான கீரவாடி ஏரி, பொன்னேரி, சித்தேரிகளில் வரத்து வாய்க்கால்களைச் சீரமைக்க வேண்டும் என்றார்.
பாமாயில் சங்க மாநிலத் தலைவர் எஸ். முருகேசன்:
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு முறையாக பதில் அளிக்கப்படுவதில்லை. அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசின் மண்வள அட்டைகள் வழங்க வேண்டும். விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மாவட்ட நிர்வாகம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறது. கடந்த காலங்களில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் பங்கேற்பர். ஆனால், தற்போது அலுவலக உதவியாளர் நிலையில் உள்ளவர்களே இதுபோன்ற கூட்டங்களில் உள்ளனர். எனவே, முதல்நிலை அலுவலர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் பேசியது:
 தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றப்படாததால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. மாவட்டம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள வசதியாக வேளாண்மை துறை மூலமாக விவசாயிகளை வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். சரியான மழை அளவை விவசாயிகள் தெரிந்துகொள்ள வட்டாரம் வாரியாக பெய்த மழை அளவை தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் அ. வேணுகோபால் பேசியது:
 ரெம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆணைடைவிட, நிகழாண்டு அதிக மழை பெய்துள்ளதாக வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால், அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. குடிமராமத்துப் பணிகளின்போது, சம்பந்தப்பட்ட பாசன விவசாயிகளும் பங்கேற்க நடவடிக்கை தேவை. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய இடவசதியின்றி ஒரே அறையில் சித்தா, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஒவ்வொரு மருத்துவப் பிரிவுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்க வேண்டும். போக்குவர்ததை சீரமைக்க பழுதடைந்து கிடக்கும் சிக்னல்களை சீரமைக்க வேண்டும். தொடர்ந்து நிகழும் சாலை விபத்துகளை தடுக்க பிரதான சாலைகளில் வேகத்தடையும், போக்குவர்தது போலீஸாரும் நியமிக்க வேண்டும்.புகர் பேருந்து நிலையத்தில் பூட்டியே கிடக்கும் ரயில்வே முன்பதிவு மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 கூட்டத்தில், எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி எஸ். மாரிமுத்து,  கூட்டுறவு சஙகங்களின் இணைப் பதிவாளர் பெரியசாமி, வேளாண் இணை இயக்குநர் சுதர்சன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com