சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டம்: தடையாக உள்ள அதிகாரி மீது நடவடிக்கை தேவை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கட்டப்பட உள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்துக்கு தடையாக இருக்கும்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கட்டப்பட உள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்துக்கு தடையாக இருக்கும் அரசு உயரதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் பி. சண்முகம்.
பெரம்பலூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர், சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டம் அமையவுள்ள பகுதியை பார்வையிட்டு மேலும் கூறியது:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட பச்சைமலை அடிவாரத்தில் மலையாளப்பட்டி கிராமம், சின்னமுட்லு அருகே நீர்த்தேக்கம் அமைக்க தமிழக முடிவு செய்து, அதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத் திட்டம், இந்த மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதியும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதியும் கிடைக்கும். மேலும், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு உயரும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மானாவாரி நிலங்கள் பாசன வசதி பெற்று, டெல்டா மாவட்டங்களைப் போல பசுமையாகக் காட்சியளிக்கும். இத்திட்டத்தால் நிலம் இழக்கக்கூடிய விவசாயிகளுக்கு அதிக தொகை நஷ்ட ஈடாகவும், இந்த நிலம் தவிர வேறு நிலம் இல்லாதவர்களுக்கு மாற்று நிலமும் வழங்கவும் வேண்டும். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ள இத்திட்டம் நிறைவேற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். 
பல்வேறு நன்மை தரக்கூடிய இத்திட்டத்தை தமிழக அரசின் உயர் பதவியில் உள்ள ஒருவர் நிறைவேற்றவிடாமல் இடையூறு செய்கிறார். அப்பகுதியில், அந்த உயரதிகாரி குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலம் இருப்பதால், இத்திட்டத்தை நிறைவேற்ற அவரது குடும்பத்தினரின் நிலம் கையகப்படுத்தப்படக்கூடும் என்பதால் அவர் இடையூறு செய்கிறார். 
இதில், தமிழக அரசு தலையிட்டு இத்திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
மாநிலச் செயலர் சாமி. நடராஜன், மாவட்டச் செயலர் என். செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com