மொழி மனிதனுக்கு விழி மட்டுமல்ல; ஆன்மாவாகவும் விளங்குகிறது: தமிழ் பல்கலை. பேராசிரியர் காமராசு

மொழி மனிதனுக்கு விழி மட்டுமல்ல; ஆன்மாவாகவும் விளங்குகிறது என தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் இரா. காமராசு பேசினார்.

மொழி மனிதனுக்கு விழி மட்டுமல்ல; ஆன்மாவாகவும் விளங்குகிறது என தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் இரா. காமராசு பேசினார்.
 பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில், 7-ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த 16-ஆம் தேதி முதல் தொடங்கியது. வரும் 26-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியின் 6-ஆவது நாளான புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
மொழி அல்லது இலக்கியம் என்றால், ஒரு செம்மார்ந்த செவ்விதழ் மொழி தான். மொழி என்கிற உணர்ச்சி பல நிலைகளிலும் உள்ளது. மொழியினுடைய தோற்றுவாய் எது, அதனுடயை ஆண்டு, வயதை தீர்மானிக்க முடியுமா என்றால் முடியாது.
மனிதனுடைய தோற்றத்தோடு, உயிர்களின் தோற்றத்தோடு மொழியினுடைய தோற்றத்தையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அறிவியல் என்பது நிரூபிக்கப்பட்ட, மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. மொழி என்பது இலக்கணம் சார்ந்தது மட்டுமல்ல. எனவே தான், உலக தாய்மொழி தினம் என்பது, உலகெங்கிலும் இருக்கக்கூடிய வட்டார மொழிதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
 தமிழ் மொழியானது நீண்ட வரலாறு கொண்டது. ஆனால், தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அண்டை மாநிலங்களில் அந்தந்த வட்டார மொழிகளில் பாடம் கற்பிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இந்த நிலை உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.  குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் ஆகிய நிலங்கள் தற்போது பாலைவனமாக காட்சியளிக்கிறது. எனவே, மொழியை பேசும்போது, நிலத்தையும் பார்க்க வேண்டும். மொழி மனிதனுக்கு விழி மட்டுமல்ல, ஆன்மாவாகவும் இருக்கிறது என்றார் அவர்.  தொடர்ந்து, "சொல்லாமல் சாகும் சொற்கள்' எனும் தலைப்பில் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் பேசியது:
கிராமப்புறங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஒவ்வொரு ஆண்டும், ஏதாவது ஒரு பொருள் வாங்கி வந்து பாதுகாக்கப்படும். அதேபோல், ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் தங்களால் முடிந்த புத்தகங்களை வாங்கி வந்து படித்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் புத்தகங்களை வெளிப்படையாக வழங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள காலகட்டத்தில் நம்மிடம் பேசும் வாய்ப்பு குறைந்துவிட்டது. பாசங்களை பகிர்ந்துகொள்ளும் வட்டார வழக்கு சொற்களையும் மறந்துவிட்டோம். நம் கலாசாரத்தை பாதுகாக்க நமது பாரம்பரிய சொற்களையும், வட்டார சொற்களையும் மறக்கக்கூடாது என்றார் அவர்.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர் உள்பட பலர் பங்கேற்றனர்.
 வெள்ளிக்கிழமை (பிப். 23) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், "வாழ்க்கை ஒரு தவம்' எனும் தலைப்பில் சுகி. சிவம், "அன்பிற் சிறந்த தவமில்லை' எனும் தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com