முதலீடு செய்து ஏமாந்தோர் நடவடிக்கை கோரி புகார்

பெரம்பலூர் அருகே மாதத் தவணை தொகையாக ரூ. 50 லட்சம் வசூல் செய்து, திரும்பத் தர மறுக்கும் ஏஜென்ட் மீது நடவடிக்கை எடுத்து, செலுத்திய பணத்தை பெற்றுத்தரக் கோரி சிறுவாச்சூர் பகுதி மக்கள் மாவட்டக் காவல் துறைய

பெரம்பலூர் அருகே மாதத் தவணை தொகையாக ரூ. 50 லட்சம் வசூல் செய்து, திரும்பத் தர மறுக்கும் ஏஜென்ட் மீது நடவடிக்கை எடுத்து, செலுத்திய பணத்தை பெற்றுத்தரக் கோரி சிறுவாச்சூர் பகுதி மக்கள் மாவட்டக் காவல் துறையிடம் சனிக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் தலைமையில், சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனு: டிஸ்க் அசெட் புரோமோட்டார் இண்டியா லிமிடெட், டிஸ்க் அசெட் லீடு இண்டியா லிமிடெட், அயாம் மார்க்கெட்டிங் ஆகிய நிறுவனங்களில் 63 மாதத்துக்கு தவணைத்தொகை செலுத்தினால், அந்த பணத்துக்கு கூடுதலாக இரு மடங்கு பணம் கிடைக்கும். இதனிடையே முதலீட்டாளர் உயிரிழந்து விட்டால் பணம் கட்டத் தேவையில்லை.
அவர்களது வாரிசுகளுக்குப் பணம் கிடைக்கும் என சிறுவாச்சூரை சேர்ந்த ஸ்ரீதர் மனைவி நித்யா கிராம மக்களிடம் கூறினார். இதையடுத்து, மாதத் தவணைத் திட்டத்தில் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், சுசிலா, சத்யா, செல்வராஜ், மருதாம்பாள், சங்குபதி, சரோஜா, பானுமதி, வசந்தா, செல்வராணி, அம்மணியம்மாள், லதா, அபர்ணா உள்பட பலர் 63 மாதங்கள் பணம் கட்டிமுடித்துள்ளனர். இதன்படி, 100-க்கும் மேற்பட்டோர் சுமார் ரூ. 50 லட்சம் வரை பணம் கட்டியுள்ளோம்.
பணத்தைத் திரும்பிப் தருவதாகக் கூறி, எங்களிடம் பத்திரத்தை பெற்றுச் சென்று பல மாதங்களாகியும், இன்னும் பணத்தைத் தரவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டால் பணத்தைத் திரும்பத் தரமுடியாது எனக் கூறுவதோடு, எங்களை மிரட்டுகிறார். பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித் தர மறுக்கும் ஏஜென்ட் நித்யா மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் கட்டிய பணத்தை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com