"தமிழகத்தில் காச நோயை ஒழிக்க அரசு நடவடிக்கை'

தமிழகத்தில் காச நோயை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 

தமிழகத்தில் காச நோயை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், காசநோய் தடுப்புத் திட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தினர், தனியார் மருத்துவ நிர்வாகத்தினர்,  மருந்தாளுநர் சங்கம், ஆய்வக நுட்புநர்கள் சங்கத்தினருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது: 
தமிழகத்தில் காசநோய் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் காசநோய் இல்லாத நிலையை உருவாக்கவும், காசநோயால் பாதிக்கப்பட்டோர் குறித்த தகவல்களை தெரிவிக்கவும் தனியார் மருத்துவர்கள், ஆய்வகத்தினர், மருந்தாளுநர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பரிசோதனை செய்து நோயாளருக்கு காசநோய் இருப்பதைக் கண்டறிந்தால், உடனடியாக சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு காசநோய் இருப்பது தெரிந்தால் அவரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பிவைக்கும் தனியார் மருத்துவமனை பரிசோதனை மையம் மற்றும் மருந்தாளுநர்களுக்கு ஊக்கத்தொகையாக அரசு சார்பில் ரூ. 500 வழங்கப்படுகிறது. மேலும், காசநோய் பாதித்தவர்களுக்கு அரசு மாதம்தோறும் ரூ. 500 உதவித்தொகை வழங்குகிறது.  மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் காசநோய் பாதிக்கப்பட்டோருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது. இந்த தகவல்களை காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கு தெரிவிக்க வேண்டும். காசநோயாளிகள் இருந்தும், அவர்களது தகவலை தெரிவிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது இந்திய மருத்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். காசநோயைத் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, 2016- 17 ஆம் ஆண்டில் பிரசவத்துக்கு பின் கருத்தடை சாதனம் பொறுத்தியதில், மாநில அளவில் முதலிடம் பெற்ற பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, அரசால் வழங்கப்பட்ட கேடயத்தை மருத்துவர்களிடம் அளித்தார் மாவட்ட ஆட்சியர் சாந்தா. 
கூட்டத்தில், மாவட்ட இணை இயக்குநர் சசிகலா, துணை இயக்குநர் (பொது) சம்பத், துணை இயக்குநர் (காசநோய்) சுரேஷ், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருந்தாளுநர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com