7 ஆண்டுகளாக பயனற்றுக் கிடக்கும் உழவர் சந்தை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் 7 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் உழவர் சந்தையை பயன்பாட்டுக்கு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் 7 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் உழவர் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
1996- இல் தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. விவசாயிகள் நேரடியாக பொதுமக்களைச் சந்தித்து காய்கறி மற்றும் பழ வகைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததால், இத்திட்டம் பொது மக்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் -  வடக்குமாதவி சாலையில் தொடங்கப்பட்ட உழவர் சந்தை இடப்பற்றாக்குறை காரணமாக வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.  தொடர்ந்து, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் ரூ. 22.50 லட்சம் மதிப்பில் உழவர் சந்தை அமைக்க 25.10. 2010-இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1.3.2011 ஆம் தேதி திறக்கப்பட்டது. இங்கு, 20 கடைகளும், 100 விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே உழவர் சந்தை போதிய பராமரிப்பின்றி மூடப்பட்டது. உழவர் சந்தை செயல்படாததால் வேப்பந்தட்டையை சேர்ந்த பெரும்பாலான மக்கள் பெரம்பலூருக்கு வந்து செல்லும் நிலையில் உள்ளனர். 
இதுகுறித்து, அப்பகுதி விவசாயி மேலும் கூறியது: மூடிக்கிடக்கும் உழவர் சந்தை திறக்கப்பட்டால், வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறுவார்கள். இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் விளைபொருள்களை கொண்டுசெல்ல வழியில்லாததால் இங்குள்ள கடைகளிலும், இடைத்தரகர்களிடமும் விற்பனை செய்து வருகிறோம். விவசாயிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, மூடப்பட்டுள்ள உழவர் சந்தையை திறக்க வேண்டும் என்றார் அவர். எனவே, கடந்த 7 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் உழவர் சந்தையை சீரமைத்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com