நாடு முழுவதும் 1.5 லட்சம் நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

நாடு முழுவதும் 1.5 லட்சம் நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் மத்திய நிதி மற்றும்

நாடு முழுவதும் 1.5 லட்சம் நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.  
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரத்துக்குள்பட்ட 21 துணை சுகாதார நிலையம் மற்றும் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நலவாழ்வு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, அத்தியூரில் தொடங்கப்பட்ட நலவாழ்வு மையத்தை குத்துவிளக்கேற்றி புதன்கிழமை தொடக்கி வைத்த அமைச்சர் மேலும் பேசியது: 
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டில் வாழும் மக்களின் ஆரோக்கியத்தைச் சார்ந்தது. எனவே பாரதப் பிரதமர், ஆயுஷ்மான் பாரத் எனும் திட்டத்தை  செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் வாழும் 4.6 சதவீத மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத்துக்காக செலவிடப்படும் தொகையால், வறுமைக் கோட்டுக்கு கீழ் செல்லும் நிலை ஏற்படுகிறது. 
இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 10.77 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 கோடி மக்கள் பயனடையும் வகையில், ரூ. 5 லட்சம் வரை மருத்துவச் செலவை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. 
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60,119 குடும்பங்கள் பயன்பெற உள்ளனர். நாடு முழுவதும் 1.5 லட்சம் நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  கடந்த நான்கரை ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 8.50 கோடி கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
தொடர்ந்து, தேசிய பார்வையிழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் பள்ளி சிறார் கண்ணொளி காக்கும் திட்டத்தின் கீழ், 5 மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளும், 8 பேருக்கு தொழுநோய் உபகரணங்களும், ஜனனி சுரக்க்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒருவருக்கு பிறப்பு சான்றிதழ், அம்மா பெட்டகம் மற்றும் உதவித் தொகை வழங்கினார் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். 
விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு உள்ள விதிமுறைகளை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.  திருச்சி விமான நிலையை விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். ஏழை, எளியோருக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம் தனியார் மருத்துவமனைகளுக்கு சாதகமானது என விமர்சிப்பது ஏற்புடையதல்ல.  பிரபலமானவர்கள் மீது புகார் சொல்பவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். 
தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். 
பாஜக மாநில பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம், கோட்ட பொறுப்பாளர் எம். சிவசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com