"வெட்டிவேர் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்'

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் வெட்டிவேர் சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என்றார் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன்.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் வெட்டிவேர் சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என்றார் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன்.
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையம் சார்பில், ஆலத்தூர் கோட்டம், இரூர் கிராமத்தில் வெட்டிவேர் சாகுபடி குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.   
முகாமில் வெட்டிவேரின் பயன்கள் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து கதிரவன் மேலும் பேசியது: 
வெட்டிவேர் நல்ல மணமும், மருத்துவக் குணமும் கொண்ட பயிராகும். தலையணை, படுக்கை, இருக்கைகள் தயாரிக்கலாம்.  இது நறுமணத்தோடு, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது. வெட்டிவேரிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யானது வாசனைத் திரவியங்கள், சோப்பு மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.  
நீண்ட புல்போல இருக்கும் வெட்டிவேரின் இலைகளை கூரை வேயவும் பயன்படுத்தலாம். வெட்டிவேரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் தசைவலி, தழும்புகள், தோலில் உள்ள கரும்புள்ளிகள் ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்து தயாரிப்பில் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதிலும், காயங்களில் பாக்டீரியா கிருமிகள் மூலம் தொற்றுகள் ஏற்படாமல் தடுப்பதிலும் பயன்படுகிறது. 
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட வெட்டிவேரை சுலபமாக சாகுபடி செய்யலாம். வேர்த்துண்டுகளை நேரடியாக அல்லது பாலீத்தீன் பைகளில் வைத்து வளர்த்து நடலாம். செம்மண், மணல் சார்ந்த நிலங்களில் நன்கு வளரும். தனிப்பயிராக அல்லது வரப்பு பயிராக, ஓரக்கால் பயிராகப் பயிரிடலாம். மண் அரிமானம் உள்ள பகுதிகளில் வெட்டிவேரைப் பயிரிட்டு அரிமானத்தை தடுக்கலாம். வளமான மண்ணில் பயிரிடப்பட்ட வெட்டிவேரானது 18 மாதங்களில் 5 அடி ஆழம் வரை செல்லக்கூடும். ஏக்கருக்கு 12 முதல் 16 குவிண்டால் மகசூல் கிடைக்கும். பூச்சிநோய் தாக்குதல் இல்லாத, விலங்குகளின் பாதிப்பு இல்லாத வெட்டிவேர் சாகுபடி இன்றைய சூழலுக்கு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். வெட்டிவேர் செடிகள் தேவைப்படுவோர் வேளாண் அறிவியல் மையத்தை அணுகலாம் என்றார் அவர். 
வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர் வே.எ. நேதாஜி மாரியப்பன்  கூறுகையில், வெட்டிவேர் சாகுபடி செய்ய ஏதுவான சூழ்நிலை, மண் வளம் சாதகமாக இருந்த போதிலும் வெட்டிவேர் எண்ணெய்யை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். இதைத் தவிர்க்க, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் அனைத்து வேளாண் அறிவியல் மையங்கள் மூலமாக வெட்டிவேர் சாகுபடி குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்த முனைந்துள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வெட்டிவேர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் நல்ல லாபமடைய வேண்டும் என்றார். 
முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இலவசமாக வெட்டிவேர் கன்றுகள் வழங்கப்பட்டன. இரூர், பாடாலூர், ஆலத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள்,  வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.  
மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ப. விஜயலட்சுமி வரவேற்றார். கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. போஜிராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com