அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டையில் ரூ. 229.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார் மக்கள்

புதுக்கோட்டையில் ரூ. 229.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் உள்ள கால்நடைப்பண்ணை வளாகத்தில் நடைபெறும் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இங்கு சுமார் 9 லட்சம் சதுரடியில் கல்லூரிக்கான 7 கட்டடங்கள் ரூ. 59.16 கோடியிலும், 11 மருத்துவமனைக் கட்டடங்கள் ரூ. 108.99 கோடியிலும், 13 குடியிருப்புகள் ரூ. 61.31 கோடியிலும் என மொத்தம் 31 கட்டடங்கள் ரூ. 229.46 கோடியில் கட்டப்படுகின்றன.
இதில் கல்லூரிக்கென கட்டப்படும் கட்டடங்களில் கல்லூரிக் கட்டடம், இரு விரிவுரையாளர் அரங்கம், நூலகம், கலையரங்கம், ஆய்வுக்கூடம், பயிற்சிப் பட்டறை அரங்கம் உள்பட மொத்தம் 20,559 சதுரமீட்டர் பரப்பளவிலும், மருத்துவமனைக்கென 700 படுக்கைகள் கொண்ட கட்டடம், வெளி நோயளிகள் பிரிவு, நிர்வாகப் பிரிவு, டிஎஸ்எஸ்டி பிணவறை, கட்டணக் கழிப்பிடம், நவீன சமையல்கூடம், சிற்றுண்டிக் கூடம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், அவசர ஊர்தி நிலையம், வங்கி, தபால் நிலையம் ஆகிய பிரிவுகளுடன் மொத்தம் 41,195 சதுரமீட்டர் பரப்பிலும் கட்டப்பட்டுள்ளது. ஆண், பெண் இரு பாலருக்கென தனித் தனி விடுதி கட்டடம், முதல்வர் குடியிருப்பு, இருக்கை மருத்துவ அலுவலர் குடியிருப்பு, ஏ, சி, டி பிரிவு குடியிருப்புகள், உடற்பயிற்சிக் கூடம், சிஆர்ஆர்ஐ ஆண்,பெண் குடியிருப்பு,செவிலியர் ஆண்,பெண் குடியிருப்பு என மொத்தக் குடியிருப்புக் கட்டடங்கள் 22644 சதுர மீட்டர் பரப்பளவு உள்பட மொத்தம் 84.399 சதுரமீட்டர் (சுமார் 9 லட்சம் சதுர அடி) பரப்பில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து ஆகியோர் முன்னிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், கண்காணிப்பு அலுவலர் பி. அண்ணாமலை உள்ளிட்டோர் சனிக்கிழமை பிற்பகல் இங்கு ஆய்வு செய்தனர்.
புதிய அரசு மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணி 95 சதவிகிதம் முடிந்துவிட்டது. சிறு சிறு வேலைகள்தான் மீதமுள்ளது. விரைவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். இதில் 2017-2018 கல்வியாண்டில் 150 மருத்துவ மாணவர்கள் இந்தக் கல்லூரியில் சேர்க்கப்பட உள்ளனர். அதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கிவிட்டது.
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் பலன் தரும் மரங்கள் நட்டு, உரிய முறையில் பாராமரிக்க வேண்டும் என்றார் அமைச்சர். ஆய்வின் போது எம்எல்ஏ-க்கள் பா. ஆறுமுகம், இ.ஏ. ரெத்தினசபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com