குடிநீர் விற்பனைக்கு அதிகாரிகள் தடை: மக்கள் மறியல்

புதுக்கோட்டை புறநகர்ப் பகுதிகளில் நீடித்துவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் சிறு வாகனங்களில் குடிநீர் எடுத்து வந்து

புதுக்கோட்டை புறநகர்ப் பகுதிகளில் நீடித்துவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் சிறு வாகனங்களில் குடிநீர் எடுத்து வந்து
விற்பனை செய்வதை அதிகாரிகள் தடை செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அருகே திருமலைராயசமுத்திரம் ஊராட்சியில் மேட்டுப்பட்டி, மேட்டுப்பட்டிகேட், தோப்புபட்டி, செங்கைதோப்பு, கணபதிநகர், சுப்பையா காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால், ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் கத்தக்குறிச்சியில் இருந்து தனியார் தண்ணீர் வாகனங்கள் மூலம் ஒரு குடம் நீரை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள் அந்த தனியார் தண்ணீர் வாகனங்களை தண்ணீர் எடுக்கவிடாமல் தடுத்துவிட்டதால், அந்தப் பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
குடிநீர் விலைக்குக்கூட கிடைக்காத நிலையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலை மேட்டுப்பட்டி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கணேஷ்நகர் போலீஸார், புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தமிழ்க்குமார், திருவரங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைப்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com