வரத்துவாரி ஆக்கிரமிப்பு, புதர்களால் நிரம்பாத குளங்கள்

கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள வரத்துவாரிகள், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பிலும், புதர் மண்டியும் உள்ளதால் மழை பெய்தும்

கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள வரத்துவாரிகள், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பிலும், புதர் மண்டியும் உள்ளதால் மழை பெய்தும் இப்பகுதிக் குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என  இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
கந்தர்வகோட்டை ஊராட்சியில் தஞ்சை சாலையில் அடைக்கலம்சாவடி, புதுக்கோட்டை சாலையில் செட்டியாகுளம், சிவன்கோயில் குளம், வங்கார ஓடை குளம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. 
தற்போது பெய்த மழைக்கு இந்தக் குளங்களில் ஒன்றுகூட  நிரம்பவில்லை, குளங்கள் குட்டைபோலக் காட்சியளிக்கின்றன. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியது:
முன்பெல்லாம் சிறிய மழைக்கே இந்தக் குளங்கள் எல்லாம் பெருகி ஓடும். ஆனால் தற்போது பெய்த மழைக்கு இக்குளங்கள் நிரம்பவில்லை. காரணம் இந்தக் குளங்களுக்கு மழை நீர் வந்துசேரும் வரத்துவாரிகள், மழைநீர் குளங்களின் கரைவரை வரும் வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பிலும், செடி கொடி மண்டி புதராகவும் மாறிவிட்டன. 
இதனால் மழை பெய்தாலும்  குளங்களுக்கு தண்ணீர் வருவதில்லை. எனவே முன்போல மழை நீர் தங்கு தடையின்றி குளங்களுக்கு வர வரத்துவாரி, வடிகால் வாய்க்கால்களைச் சீரமைத்து,  புதர்களை அழித்தால் மட்டுமே குளங்கள் நிறையும்.
மேலும் குடிமராமத்து பணியில் கந்தர்வகோட்டை பகுதி குளங்கள், நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இக்குளங்களைப் பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com