நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற நடவடிக்கை தேவை: கருத்தரங்கில் வலியுறுத்தல்

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் மருத்துவக் கல்வி இடங்களுக்கு விலக்குப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டையில்

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் மருத்துவக் கல்வி இடங்களுக்கு விலக்குப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய முற்போக்குப் பேரவை மாநிலக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

கருத்தரங்குக்கு பேரவையின் மாநிலத் தலைவர் அரங்க. சின்னப்பா தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு, நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்குப் பெற மத்திய,  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட  2 மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும்.
மாநில அரசுகள் அந்தந்த மாநில நிலைமைக்கு ஏற்ப 50 சதவீதத்திற்கு குறையாமல் அரசு மருத்துவர்களுக்கு டிப்ளமா, முதுநிலை மருத்துவம், உயர்சிறப்பு மருத்துவம் ஆகிய படிப்புகளில் இட ஒதுக்கீட்டை வழங்கிக்கொள்ளலாம், மாணவர் சேர்க்கை விதிமுறைகளை வகுத்துக்கொள்ளலாம் என்ற வகையில், இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் அவசரச் சட்டம் மூலம் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொருளாளர் டாக்டர் டி. நவரத்தினசாமி கருத்தரங்கை தொடக்கிவைத்தார். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் த. அறம், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கே. இளமாறன், அறந்தாங்கி திசைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ். தட்சிணாமூர்த்தி, இந்திய மருத்துவச் சங்கத்தின் புதுக்கோட்டை செயலாளர் டாக்டர் டி.எஸ். ராமமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் கருத்தரங்க நிறைவுரையாற்றினார். ஆசிரியர் கே. மாரிமுத்து வரவேற்றார்.
முன்னதாக ஜி.ஆர். ரவீந்திரநாத் அளித்த பேட்டி: உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளான பிஎம், எம்சிஎச், டிஎம் போன்ற பிரிவுகளில் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 192 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் 100 சதவிகிதம் படித்து வந்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி இந்த 100 சதவிகித இடங்களையும் இழந்துவிட்டோம். இதை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவில்லை.
மேலும், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழக அரசு இப்பிரச்னையை சட்ட ரீதியாக அணுக வேண்டியது மிக அவசரம். இல்லாவிட்டால், இதையே காட்டி இளநிலை, முதுநிலை மருத்துப் படிப்புகளிலும் 100 சதவிகித இடங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு இழந்துவிட்டால், எதிர்காலத்தில் பொறியியல் கல்வி உள்ளிட்ட பல்வேறு தொழில் கல்வியின் உரிமைகளும் பறிபோகும் அபாயம் உள்ளது.
நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற முடியாமல் போனால், தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தையும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கிடும் வகையில், ஆந்திராவைப் போல தமிழக அரசும் சட்டம் இயற்ற வேண்டும்.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில்  தமிழக மாணவர்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com