"சிவநெறியை உலகறியச்செய்தவர் திருஞானசம்பந்தர்'

சிவநெறியை உலகறியச்செய்தவர் திருஞானசம்பந்தர் என்றார்  காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தழிழாய்வுத் துறை இணை பேராசிரியர் முனைவர் கிருங்கை  சொ.சேதுபதி.

சிவநெறியை உலகறியச்செய்தவர் திருஞானசம்பந்தர் என்றார்  காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தழிழாய்வுத் துறை இணை பேராசிரியர் முனைவர் கிருங்கை  சொ.சேதுபதி.
புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற திருமுறை மாநாட்டின் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று  "தமிழ் ஞானசம்பந்தரின் சொல்லோவியம்'  என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
சோழ வளநாட்டுச் சீர்மிகு சீர்காழி திருத்தலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகவாகத் தோன்றியவர் திருஞானசம்பந்தர். அவரது பாடல் இசை வழி பிறந்து எல்லாவற்றையும் இசைவிக்கிறது. இறைவனையும் ஈர்த்து வசமாக்கிறது.  செந்நாப்புலவர்  ஏந்திய செழுந்தமிழைத் தெய்வத் தமிழாக உணர்கிறார், உணர்விக்கிறார்.  எனவே நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தப்பெருமான், தன் திருவுளத்தில் எழுந்தொளிரும் இறைவனைப் பதிகங்கள் தோறும் பற்பல கோணங்களில் சொல்லோவியமாகப் படைத்துக் காட்டுகிறார்.  நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பதினாறு ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்ந்து பணி பல செய்தார். தலங்கள் தோறும் சென்று பதினாறாயிரம் பாடல்கள் பாடினார். ஆனால் அவற்றில் நமக்கு இப்போது கிடைத்துள்ளவை 383 பதிகங்களே என்றார் சொ. சேதுபதி.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்  மா.சிதம்பரம்  பங்கேற்று "தமிழ் ஞானசம்பந்தர் காட்டும் எழிலார்ந்த இயற்கைச் சூழல்' என்ற தலைப்பில் பேசியது:
சைவ சமய திருமுறைகள் பன்னிரண்டு என வகுக்கப் பெறும். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகளைப் பாடிய பெருமை திருஞானசம்பந்தரைச் சேரும். தென்னாடு செய்த தவப்பயனாய் பிறந்த ஞானசம்பந்தரின் தேவாரத்துள் இறையனுபவமும், இயற்கைச் சார்ந்த வருணனைகளும் இடம் பெற்றுள்ளன. ஐம்பூதங்கள் இயற்கை, ஐம்பூதங்களின் சேர்க்கையான உலகமும் இயற்கை.  ஓரறிவுயிர் முதல் அனைத்தும் இயற்கை எனினும் ஆறறிவுடைய மனிதன் தன் அறிவாலும், செய்கையாலும் இயற்கையின் இயல்பு நிலையிலிருந்து மாறி அமைவதால், மனிதன் நீங்கலாகப் பிற இயற்கையாக எண்ணப்படுகின்றன. தமிழர் இயற்கையையே இறைவனாகப் போற்றிய தகைமையை உடையோர் ஆவர். இவ்வுலகின் கண் காணப்படும் இயற்கைச்சூழல் அனைத்தும் தமிழர் தம் கண்களுக்கு இறைமையின் வடிவமாகத் தோன்றியதால் அவ்வியற்கைச் சூழலிருந்து தம் இறைவனைக் கட்டமைத்துக் கொண்டனர். இதனை, பழந்தமிழர் இயற்கையை உயர்ந்த பொருளாக, அதாவது கடவுளாகக் கொண்டு வாழ்ந்தனர். தேவாரம் பாடிய மூவருள், இயற்கையில் தம் இதயத்தைப் பறிகொடுத்தது, மிகுதியும் இயற்கையைப் பாடியவர் என்னும் பெருமை ஞானசம்பந்தரையே சாரும் என்றார்.
முன்னதாக, தேவாரப்பாடல் ஒப்பித்தல் போட்டியில் வென்ற பள்ளி மாணவிகள் 10 பேரில் முதல் 2 இடங்களில் வென்ற 6 பேருக்கு தங்கம், வெள்ளிக்காசுகளும், பிற மாணவிகளுக்கு நூல்களும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர்  சுப்பையா தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதையடுத்து, பிற்பகலில் திலகவதியார் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகரன் தலைமையில் நடந்த நிறைவு விழாவில்,  பூம்புகார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அகரமுதலன், தஞ்சை வேங்கிடசாமிநாட்டார் கல்லூரியின் செயலர் ரா. கலியபெருமாள், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலாதொண்டைமான் ஆகியோர் பேசினர். இதில், பேராசிரியர்கள் அய்க்கண்,  சேதுராமன் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் மு. ராமுக்கண்ணு, புண்ணியமூர்த்தி, சா. ராமதாஸ், ஜி.எஸ். தனபதி, எஸ்விஎஸ். ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர். முன்னதாக,  ஆடிட்டர் அண்ணாமலை வரவேற்றார். காசி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com