குளந்திரான்பட்டு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், குளந்திரான்பட்டு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், குளந்திரான்பட்டு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் அவர் மேலும் பேசியது:
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகவும், இரண்டு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகவும் தமிழகம் முழுவதும் 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2017-2018  கல்வி ஆண்டில் 8 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 4 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், குளந்திரான்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள ரூ. 8 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு சுற்றுச்சுவர் மூலம் மாணவ, மாணவிகள் பாதுகாப்பான சுழ்நிலையில் கல்வி கற்கமுடியும். மேலும், இப்பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொடுதிரை வகுப்பின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பாடங்கள், விழிப்புணர்வு பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி சார்ந்த தகவல்களை நவீன முறையில் நடத்த முடியும். இதை மாணவ, மாணவிகள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கறம்பக்குடியில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ. 3.60 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்கள் பயன்பெறும் வகையில் குளந்திரான்பட்டு கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர்.
நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பா. ஆறுமுகம், இ.ஏ. ரெத்தினசபாபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், கோட்டாட்சியர் ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com