உயர் நீதிமன்றம் கெடு: புதுகையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

உயர்நீதிமன்றம் விதித்துள்ள கெடுவுக்குள் புதுக்கோட்டை நகரில் மாநில, தேசிய நெடுஞ்சாலை, நகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

உயர்நீதிமன்றம் விதித்துள்ள கெடுவுக்குள் புதுக்கோட்டை நகரில் மாநில, தேசிய நெடுஞ்சாலை, நகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, புதுக்கோட்டை கிழக்கு ராஜவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பெரிய கட்டடங்களின் முகப்புகள் இடித்து சாலை அகலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், புதுகை நகரின் முக்கிய பகுதியான அண்ணாசிலை, மார்த்தாண்டபுரம் பகுதிகளில் உள்ள நீண்டகால ஆக்கிரமிப்புகளை அகற்றும் நோக்கில் வருவாய்த் துறை, நில அளவைத் துறை சார்பில் அப்போது அடையாளக்கொடி நடப்பட்டது. என்றாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நிகழாண்டின் தொடக்கத்தில் புதுகை தலைமை மருத்துவமனையிலிருந்து புத்தாம்பூர் பிரிவு சாலை வரை, அங்கிருந்து திருமயம் சாலையிலுள்ள வெள்ளாற்றுப்பாலம் வரை, அங்கிருந்து மாவட்ட ஆட்சியரக ரவுண்டானா வரை, அங்கிருந்து மேட்டுப்பட்டி வரை, புதுகை நகராட்சியில் மேல நைனாரிக்குளம், வெங்கப்பன் ஊருணி போன்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என  புதுகையைச் சேர்ந்த ஒருவர் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், கடந்த மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவர் தொடுத்தார்.  இதையடுத்து, ஆட்சியர், ஆணையர், தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அனைவரும் கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர்.
அப்போது, ஆக்கிரமிப்புகளை ஜூன் 25 ஆம் தேதிக்குள் அகற்றி, அது தொடர்பான ஆவணங்களை ஜூன் 28 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, புதுகை, தஞ்சை, காரைக்குடி, திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், நகராட்சி சாலைகளில் இருபுறமும் பல ஆண்டுகளாக உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அடையாளக் குறியிடப்பட்டு, கடந்த 2 நாட்களாக அவற்றை பொக்லைன் மூலம் இடிக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com