உடையனேரி காலனியில் கோஷ்டி மோதல், குடிசைக்கு தீ

புதுக்கோட்டை அருகே உடையனேரி காலனியில் அப்பகுதி மக்களுக்கும், வேலி அமைத்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையொட்டி குடிசைக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் சனிக்கிழமை

புதுக்கோட்டை அருகே உடையனேரி காலனியில் அப்பகுதி மக்களுக்கும், வேலி அமைத்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையொட்டி குடிசைக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் சனிக்கிழமை பதற்றம் ஏற்பட்டது.
புதுகை அருகேயுள்ள உடையனேரிப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 ஏக்கரில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அங்கிருந்தோர் பிழைப்புக்காக தேயிலைத் தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைகளை அமைத்து வசித்து வருகின்றன. இந்நிலையில் அந்த இடம் தனக்குச் சொந்தமானது என ஒரு காவலர் கூறியதால், அந்தப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அக்காலனியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தெருவிளக்கு, குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த வசதியும் இங்கு செய்து தரப்படவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை காவலர் தரப்பைச் சேர்ந்த சிலர் உடையனேரி காலனிப்பகுதியில் கல்லுக்கால் அமைத்து கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனராம்.
இதற்கு காலனி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் நிலை உருவானது. இச்சூழலில் அப்பகுதியில் உள்ள ஒரு குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்துவிட்டு, போராடி தீயை அணைத்தனர்.
தகவலறிந்த துணைக் கண்காணிப்பாளர் முரளி, ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், தமிழ்மாறன், போலீஸார் அங்கு குவிந்தனர். வட்டாட்சியர் கமலக்கண்ணன் சம்பவ இடத்தில் இரு தரப்பினரிடையே நடத்திய பேச்சுவார்த்தைப்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com