’தெருவிளையாட்டை மறந்த குழந்தைகள்'
By DIN | Published on : 20th March 2017 04:05 PM | அ+அ அ- |

தொலைக்காட்சி, ஆண்ட்ராய்டு போன்களால் இன்றைய குழந்தைகள் தெருவிளையாட்டை மறந்துவிட்டன என்றார் காவல் ஆய்வாளர் பி. தமிழ்மாறன்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:
முன்பெல்லாம் கிராமத்து வீதிகளில் சிறுவர், சிறுமியர் கூட்டம் கூட்டமாக விளையாடிக் கொண்டிருப்பதை எங்கள் தலைமுறையில் பார்த்தோம். ஆனால், இன்றைக்கு தொலைக்காட்சி, ஆண்ட்ராய்டு போன்களின் ஆக்கிரமிப்பால் விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்துவிட்டது. ஓடியாடி குழுக்களாக விளையாடியதையெல்லாம் இனி கதைகளில் மட்டுமே படிக்க முடியும் நிலை ஏற்பட்டுவிட்டது.
எதிர்வீட்டுக் குழந்தைகளை ஏறெடுத்தும் பார்க்காமல், ஆன்லைன் விளையாட்டுகளில் வெளிநாட்டில் இருக்கும் யாருடனோ நம் வீட்டுக் குழந்தைகள் விளையாடுகின்றன. தற்போதுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு என்றாலே கிரிக்கெட் மட்டுமே நினைவுக்கு வருகிறது. பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் டெஸ்ட்டுகளைவிட கிரிக்கெட் டெஸ்டுகளில்தான் அதீத கவனம் செலுத்துகின்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் மறைந்து கொண்டிருக்கும் பாரம்பரிய விளையாட்டுகளை பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் வெங்கடேஸ்வரா பள்ளி நிர்வாகம் முன்னெடுக்கும் முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியது என்றார்.
இதைத்தொடர்ந்து, டயர் ஓட்டுதல், பச்சைக்குதிரை, திருடன் போலீஸ், செரட்டு, கோலிக்குண்டு, கயிறு தாண்டுதல், கில்லி, ஆடுபுலி ஆட்டம், சிலம்பாட்டம், கபடி, உறியடித்தல், வழுக்குமரம், பம்பரம் போன்ற சிறுவர்களுக்கான விளையாட்டுக்களும், பருப்புக்கடைதல், சொப்பு சாமான், கிச்சுகிச்சு தாம்பளம், கண்ணாமூச்சி, டிக் டிக் டிக், கலர் விளையாட்டு, குலைகுலையா முந்திரிக்கா, நொண்டி ஆட்டம், பல்லாங்குழி, ஐந்துகல், தாயம், நூத்தாங்குச்சி, புட்டு, கல்லா-மண்ணா, கல்லாங்காய் பரமபதம், பட்டம்விடுதல், கோகோ, பலூன் உடைத்தல் போன்ற சிறுமிகளுக்கான விளையாட்டுக்களும், பெற்றோர்களுக்கான இளவட்டக்கல் தூக்குதல், லக்கி கார்னர், உறியடி போன்ற விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
பரிசளிப்பு நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சா. வாஞ்சிநாதன், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் பேராசிரியர் எம். கருப்பையா, செயலர் பி. ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.