மாமன்னர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

குடும்பத்துக்கும், சுற்றத்தாருக்கும் பயனுள்ள வகையில் மாணவர்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்றார் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜெ. மஞ்சுளா.

குடும்பத்துக்கும், சுற்றத்தாருக்கும் பயனுள்ள வகையில் மாணவர்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்றார் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜெ. மஞ்சுளா.
புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் முதல்வர் இரா. தியாகராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி மேலும் அவர் பேசியது:
இக்கல்லூரியில் 3,500 பேர் பயின்று வருவது பெருமைக்குரியது. இந்தியாவில் கல்வி பயில்வோர் 22.7 சதவிகிதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் கல்வி பயில்வோர் 44.8 சதமாக உள்ளது. இதற்கு தமிழகத்தில் நல்ல கல்விச்சூழல் இருப்பதுதான் முக்கியக் காரணம். இங்கு பட்டம் பெறும் பலரும் தாங்கள் என்னவாகப் போகிறோம் என்பதையும், எதில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். ஒழுக்கமில்லாத கல்வி பயனற்றதாகிவிடும்.
பணியில் இருக்கும்போது உயர்த்திக் கொள்ள உங்களது கல்வித்தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், இன்றைய நவீன தொழில்நுட்பங்களுடன் போட்டியிட உங்களை நித்தம்நித்தம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
படிப்புடன் திறன் மேம்பாடு அவசியம். வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் கடந்தாண்டில் 30 கல்லூரிகளிலும், நிகழாண்டில் 33 கல்லூரிகளிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அத்துடன் திறன் மேம்பாடு, கணினி அறிவு, பிறரிடம் பேசும் தொடர்புத்திறன் ஆகிய திறமைகள்தான் வேலைவாய்ப்பை பெறுவதற்கு உதவி செய்யும். போட்டித் தேர்வுகளுக்குக் கடும் பயிற்சி பெற வேண்டும். வெற்றி கிடைக்கும் வரை முயற்சியைக் கைவிடக்கூடாது. தொழில்முனைவோராக மாற நினைப்போர் அத்தொழிலின் நீடித்த தன்மை குறித்த புரிதலுடன் செயல்பட வேண்டும். பணிபுரியும் இடமாகவும் அல்லது வீடாக இருந்தாலும் பிறருடைய கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மை அவசியம்.
எந்த ஒரு வெற்றிக்கும் உடல் ஆரோக்கியம் முக்கியப் பங்காற்றும் என்பதை மனதில் கொண்டு சரியான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்
என்றார். இதில் இளங்கலை, முதுகலை எம்.பில். ஆகிய பிரிவுகளில் மொத்தம் 990 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். அனைத்துத் துறைத் தலைவர்கள், போராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com