திருவரங்குளம் சிவன்கோயிலில் மழைவேண்டி சிறப்பு யாகம்

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில், திருவரங்குளம் அருள்மிகு அரங்குளநாதர் உடனுறை பெரியநாயகி அம்பாள் கோயிலில் மழை

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில், திருவரங்குளம் அருள்மிகு அரங்குளநாதர் உடனுறை பெரியநாயகி அம்பாள் கோயிலில் மழை வேண்டி, பார்வதி பரமேஸ்வர ஹோமம், வருண ஜப ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பகுதியில் புராண காலத்தில் வாழ்ந்த நிம்பாரணியர் எனும் பக்தரின் கடுந்தவத்தால் சிவபெருமான் அரன்குளத்துக் கரையின் வேப்பமரத்தடியில் லிங்க வடிவாய் தோன்றினார்.
பெருமானை வணங்கிய நிம்பாரணியர் தனக்கு காட்சி தந்தருளிய இதே லிங்க வடிவத்தில் எக்காலத்திலும் இங்கே எழுந்தருள வேண்டும். கயிலையில் வீற்றிருப்பது போல பூரணாம்சத்துடன் திருவருள் பொழிய வேண்டுமெனவும், இவ்வூருக்கு நிம்பாரணியஷேத்திரம் எனும் பெயர் வழங்க வேண்டும் எனவும் வேண்டினார். இறைவனும் அவ்வாறே அருளினார். அன்று முதல் இத்தலம் திருவரன்குளம் என்றும், பிறகு மருவி திருவரங்குளம் எனவும், நிம்பாரண்யம் என்றும் அழைக்கப்படுகிறது.
இறைவனுக்கு ஹரதீர்த்தேஸ்வரர், அரன்குளநாதர், அரங்குளநாதர், நிம்பாரண்யநாதர் என்ற பெயர்களும் உண்டு. இதன் காரணமாகவே இக்கோயிலில் மழை வேண்டி ஹோமம் நடத்தப்படுவதாக நம்பிக்கை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையின்மையால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி நிலவுகிறது. மக்களும், கால்நடைகளும் தண்ணீருக்காகத் தவித்து வரும் நிலையில், மழை வேண்டி ஆங்காங்கே பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இச்சூழலில், மாவட்ட அதிமுக சார்பில் திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, திங்கள்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைவுடன் யாகம் தொடங்கியது. தொடர்ந்து, புண்ணியாகவாசம், பஞ்சகவ்ய பூஜை, பார்வதி பரமேஸ்வர பூஜை, வருண கும்ப பூஜை, வருண ஜபம், வேதபாராயணம், திருமுறைபாராயணம், கோ பூஜை, மங்கள பூரணாஹூதி, விஷேச அபிஷேகங்கள், தீபாராதனை ஆகியவை சிவாச்சாரியர்களால் நடத்தப்பட்டன.
இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து, அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ. ரெத்தினசபாபதி, மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வி.சி. ராமையா, ஒன்றிய, நகர, பேரூர் பிரிவு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com