முதியவர் கொலை வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை அருகே இடப் பிரச்னை தொடர்பான தகராறில் முதியவரைக் கொலை செய்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, புதுக்கோட்டை அத்தியாவசியப்பண்டங்கள் சட்ட சிறப்பு

புதுக்கோட்டை அருகே இடப் பிரச்னை தொடர்பான தகராறில் முதியவரைக் கொலை செய்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, புதுக்கோட்டை அத்தியாவசியப்பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வேங்கடக்குளத்தைச் சேர்ந்தவர் கஸ்மிர்ராஜா (70). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த திருஞானம் மகன் அருள்ஜோதிவளவனுக்கும் (32), வீட்டுமனை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 7.5.2015 அன்று இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இதில், கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த கஸ்மிர்ராஜா புதுக்கோட்டை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் வழக்குப்பதிந்து, அருள்ஜோதி வளவன், அவரது தாய் சூசையம்மாள்(50) ஆகியோரைக் கைது செய்தனர்.
புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் சிறப்பு அரசு பொது வழக்குரைஞர் பி. ராமராஜ் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கிங்ஸிகிறிஸ்டோபர் குற்றம் சாட்டப்பட்ட அருள்ஜோதிவளவனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 1.01 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், இந்த அபராதத் தொகையை கொலை செய்யப்பட்ட முதியவரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும், சாதாரண காயம் ஏற்படுத்திய குற்றம் புரிந்த சூசையம்மாளை மன்னித்து விடுதலை செய்வதாகவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com