"சாமானியரும் போராட முடியும் என உணர்த்தியது சம்பரான் போராட்டம்'

ஆட்சியாளர்களை சாமானியரும் எதிர்க்க முடியும் என உணர்த்தியது சம்பரான் சத்தியாகிரகப் போராட்டம் என்றார்  தேவகோட்டை எழுத்தாளரும், பேராசிரியருமான பழனி. ராகுலதாசன்.

ஆட்சியாளர்களை சாமானியரும் எதிர்க்க முடியும் என உணர்த்தியது சம்பரான் சத்தியாகிரகப் போராட்டம் என்றார்  தேவகோட்டை எழுத்தாளரும், பேராசிரியருமான பழனி. ராகுலதாசன்.
புதுக்கோட்டை  அரசு மன்னர் கல்லூரியில் வரலாற்றுத் துறையும், புதுகை வாசகர் பேரவையும் இணைந்து வியாழக்கிழமை நடத்திய  முதல் இந்திய சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது :
கடந்த 1917 -ல் பிகார் மாநில எல்லையோரப் பகுதியான சம்பரான் என்ற இடத்தில் மகாத்மாகாந்தி தலைமையில்  நடந்ததுதான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் சத்தியாகிரகப் போராட்டமாகும்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தி இந்தியாவில் நடத்திய முதல் போராட்டமானது ஆங்கிலேய ஆட்சியாளர்களை கல்வியறிவற்ற சாதாரணக் குடியானவர்களும் எதிர்த்து நிற்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டி முக்கிய நிகழ்வாகும். கல்வியும், பொது சுகாதாரமும் இந்தியர்களுக்கு அடிப்படைத் தேவை என்பதை உணர்ந்து, அதை காந்தி தொடங்கியதும் இங்கேதான்.
நேபாள எல்லையோரப் பகுதியான சம்பரானில் நிலப்பிரபுக்களாக இருந்த ஆங்கிலேயர்கள் நடைமுறைப்படுத்திய தீன்-கதியா என்ற முறை மூலம் குடியானவர்கள் தங்களது நிலங்களில் 20 -ல் 3-பங்கில் சாயத்துக்காகப் பயன்படக்கூடிய (வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய) அவுரிச்செடியை கட்டாயம் சாகுபடி செய்து கொடுக்க வேண்டும். இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெருந்துயரத்துக்கு ஆளாயினர்.  இவர்களில் ஒருவரான ராஜ்குமார்சுக்லா என்பவர், 1916 இறுதியில்  லட்சுமணபுரியில் (லக்னோ) நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்  பங்கேற்ற காந்தியை நேரில் சந்தித்து தங்களுக்கு உதவிடக் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து 1917 - ஏப்ரலில் சம்பரானுக்கு  நேரில் சென்ற காந்தி  அங்கு  குடியானவர்களின் நிலையைப் பார்த்து, அவர்களை விடுவிக்க முயன்றபோது, ஆங்கிலேய அரசு 144 தடையுத்தரவு போட்டு காந்தி வெளியேற வேண்டுமென அறிவித்தது.
ஆனால், தான் வந்த பணியை முடிக்காமல் வெளியேற மாட்டேன் என காந்தி உறுதிபடக் கூறி தடையை மீறி சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கைதானார். அப்போது, நீதிமன்றம் என்ன தண்டனை அளித்தாலும் ஏற்பதாகத் தெரிவித்தார் காந்தி. இதையடுத்து அவர் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.  
காந்தி நினைத்தபடி குடியானவர்களின் துயரத்தை அறிந்த அரசாங்கம் தானாகவே முன்வந்து அவர்களது துயரத்தைப் போக்கும் வகையில் நூறாண்டுகளாக இருந்து வந்த தீன்-கதியா முறையை ஒழித்தது. இந்த நிகழ்வின்போது காந்தியுடன் திரண்ட கூட்டம் எண்ணிலடங்காதது.  மேலும்,  சம்பரானில் அவர் மேற்கொண்ட கல்வி, பொது சுகாதார செயல்பாடுகளை அனைத்துப்பகுதிகளிலும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  முதன் முறையாக படிப்பறிவில்லாத குடியானவனும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக  நிற்க முடியும் என்பதை எடுத்துக்காட்டிய இப்போராட்டம் நடந்து (17.4.1917) நூறாண்டுகள் ஆகிவிட்டது.  அதிகாரத்துக்கு பயந்து நடுங்கி  எதிர்த்துப் பேசாது பணிந்து கிடந்த இந்தியர்கள் இனி அதிகாரவர்க்கத்தை வலிமையுடன் எதிர்த்து நிற்க முடியும் என்பதை ஆங்கிலேயர்களுக்கு தெளிவாக உணர்த்திய நிகழ்வும் இதுதான். சம்பரானில் சட்டத்தை மீறிய காந்தியின் செயல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சம்பரான் போராட்டம் நடந்து நூறாண்டு கடந்த பிறகும்கூட இதுவரை விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பதற்கு காரணம் காந்தியை அவர்கள் பின்பற்றாததே என்றார்.
கல்லூரி முதல்வர் ஆர். தியாகராஜன் தலைமை வகித்தார்.  பேரவைச் செயலர் எஸ். விஸ்வநாதன் அறிமுகம் செய்தார்.
ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி, மகாத்மாகாந்தி சமூக நலப்பேரவை நிறுவனர் வைர.ந. தினகரன், பேராசிரியர் அ.சி. நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர் எம். பற்குணன் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் சி. சேதுராமன் தொகுத்தளித்தார். உதவிப்பேராசிரியர் ஜே.பிரின்ஸ்லிஐசக் கிறிஸ்துதாஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com