மதுக்கடையை மூடக்கோரி முதல்வருக்கு மனு

புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக மீண்டும் பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள மதுபானக்கடைகளை அகற்ற வேண்டுமென முதல்வருக்கு காந்தி பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக மீண்டும் பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள மதுபானக்கடைகளை அகற்ற வேண்டுமென முதல்வருக்கு காந்தி பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் நிறுவனர் வைர.ந. தினகரன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி,  புதுக்கோட்டை நகராட்சி எல்லைக்குள் எந்தக் கடைகளும் இல்லாமல் தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத நகராட்சி என்ற பெருமையை  புதுக்கோட்டை நகராட்சி பெற்று அது அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களிலும் வெளிவந்தது. அந்த மகிழ்ச்சியை நீடிக்கவிடாமல் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற  வழிகாட்டுதலையும் மீறி,  மீண்டும் புதுக்கோட்டை நகரில் மதுபானக்கடைகளை திறந்து மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.  புதுக்கோட்டை இராணியார் மகப்பேறு மருத்துவமனை செல்லும் பாதை பெண்கள் அதிகம் செல்லும் பாதையாகும். பல தனியார் மருத்துவமனைகள், நகராட்சி பள்ளி, நகர்மன்ற வளாகம், உணவகங்கள் உள்ள பகுதி மடடுமல்ல, நெடுஞ்சாலையிலிருந்து 5  மீட்டர் தொலைவில்  மட்டுமே உள்ள இடத்தில் மதுக்கடை திறந்திருப்பது சட்டத்திற்கு மட்டுமல்ல, தர்மத்திற்கும் புறம்பானது. அதேபோல், புதிய பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்திருக்கும் கடைகளும் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும்  இடையூறாக இருக்கிறது. எனவே, இந்த கடைகளை உடனடியாக மூடி தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத நகராட்சி என்ற பெருமையை  புதுக்கோட்டை நகராட்சிக்கு மீண்டும் வழங்கவேண்டும்.  முதல்வர் 14.10.2017 புதுக்கோட்டைக்கு வருவதற்குள்  அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலமாக தமிழக பெண்களின் கண்ணீரைத் துடைத்து இந்த அரசு மக்களின் அரசாக செயல்பட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com