வீடு வீடாகச் சென்று கொசு மருந்து தெளிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று கொசு ஒழிப்பு  மருந்து தெளிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று கொசு ஒழிப்பு  மருந்து தெளிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பேரூராட்சி லட்சுமி திரையரங்கப்பகுதி, குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் செனயக்குடி ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்து அவர் மேலும் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை விரைவுபடுத்தி, டெங்கு இல்லாத நிலையை எட்ட மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட அளவிலான அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அந்தப்பணிகள் முழுமையாக நேரடியாகவும், தொழில்நுட்ப முறையிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதில், குன்றாண்டார்கோவில் ஒன்றியம், செனயக்குடி ஊராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள், உள்ளாட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வரும் கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசுக்கள் வெளியேறக்கூடிய  காலை 5.30 முதல்  7.30 மணி வரை தொடர்ந்து புகைமருந்து அடிக்குமாறு சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. காலை  10 மணிக்கு மேல், சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று புகைமருந்து அடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலை பரப்பும்  கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகும் என்பதால், பொதுமக்கள் குடிதண்ணீர் பாத்திரங்களை  மூடி வைத்துப் பயன்படுத்த வேண்டும். காய்ச்சலால் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீரை பொதுமக்களுக்கு தினந்தோறும் விநியோகிக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் விவரங்களை சேகரித்து கண்காணிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
இதில், உதவி இயக்குநர் தணிக்கை கே. காந்தி (குளத்தூர் மண்டல கண்காணிப்பு அலுவலர்), வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா, குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் வி. உதயகுமாரி, ராமச்சந்திரன்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com