புயல் நிவாரண நிதி கோருவது மாநிலத்துக்குரிய உரிமை: இந்திய கம்யூ. தேசியச் செயலர்

புயல் நிவாரண நிதியை மத்திய அரசிடம் கோருவது என்பது கெஞ்சிக் கேட்பதல்ல;

புயல் நிவாரண நிதியை மத்திய அரசிடம் கோருவது என்பது கெஞ்சிக் கேட்பதல்ல; மாநிலத்துக்குரிய உரிமை என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து. ராஜா எம்பி.
புதுக்கோட்டையில் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட வெள்ளிக்கிழமை வந்த அவர் அளித்த பேட்டி:
கஜா புயல் என்பது முன் எப்போதும் கண்டிராத தாக்குதல். சொல்ல முடியாத, மதிப்பிட முடியாத இழப்பு.  தென்னை, பலா மரங்கள் சாய்ந்துள்ளன.  விவசாயிகள் இதிலிருந்து இயல்பான வாழ்வாதாரத்துக்குத்  திரும்ப 5 முதல் 10 ஆண்டுகளாகும். மத்தியக் குழுவும் வந்து சென்றுள்ளது. மாநில அரசும் ரூ. 15 ஆயிரம் கோடி இழப்பீடு கோரியுள்ளது.
மாநில அரசு கோரியுள்ள நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.  புயல் நிவாரண- இப்பீடுகளைக் கோருவது என்பது கெஞ்சிக் கேட்பதல்ல; பேரிடர் நிதியில் மாநிலத்துக்குரிய உரிமை என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுவரை தமிழ்நாட்டைப் பாதித்த பேரிடர்களில் மாநில அரசு கேட்ட தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. இம்முறையும் அதுபோல் நடந்தால்  நிதி கோரி மாநில அரசு போராட வேண்டும்.
மத்திய அரசின் அழுத்தங்களுக்கு இணங்கிப்போகும் அரசாக மாநில அரசு தொடருமானால் தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றத்துக்கு மக்களைத் திரட்ட வேண்டிய சூழல் வரும்.  
வரும் டிச. 11ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. கஜா புயல் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை தாராளமாக வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்துவோம்.
இந்திய அரசியல் சாசனத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் மதச்சார்பின்மை, சமத்துவம், ஜனநாயகத் தன்மைகளைச் சீர்குலைக்கும் வேலையை பாஜகவும், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளும் தீவிரமாகச் செய்கின்றன.
அதேநேரத்தில் பொருளாதார நடவடிக்கைகளிலும் பாஜக அரசு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
எனவே இந்த அரசு ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும். இதற்காக பாஜக எதிர்ப்புக் கட்சிகள் ஒருங்கிணைந்து வருகின்றன.  இந்நிலையில் தற்போது நடைபெறும் இரு மாநிலத் தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கு எதிராகவே இருக்கும் எனத் தெரிகிறது. நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அணிச்சேர்க்கையில் நல்ல தாக்கத்தை இவ்விரு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் தரும்.  மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நதிநீர் விவகாரங்களில் தமிழ்நாட்டின் கவலையை மத்திய அரசு உணர வேண்டும் என்றார் ராஜா. பேட்டியின்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலர் வே. துரைமாணிக்கம், இந்திய கம்யூ. மாவட்டச் செயலர் மு. மாதவன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com