மறக்கப்பட்ட மண்பானை: சோகத்தில் தொழிலாளர்கள்

பொதுமக்களிடையே மண்பாண்டங்களின் முக்கியத்துவம் குறைந்ததால் இத்தொழில் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களிடையே மண்பாண்டங்களின் முக்கியத்துவம் குறைந்ததால் இத்தொழில் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 பொங்கல் பண்டிகை என்றாலே, புது மண் பானையில் பொங்கலிடுவதுதான் தமிழர்களின் சிறப்பு. ஆனால், காலமாற்றத்தால் தற்போது பித்தளை, எவர்சில்வர், அலுமினியம் போன்ற பாத்திரங்களே அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இதன் விளைவாக பராம்பரியம் மிக்க மண் பானையில் பொங்கலிடுவது தற்போது நகரங்களில் முற்றிலும் அழிந்துவிட்டது. 
கிராமங்களிலும் இதன் பயன்பாடு குறைந்து வருவது வேதனைக்குரியது.
 அறந்ததாங்கி நகரில் மண்பானைகள் மற்றும் குழம்பு வைக்கும் சட்டி, அடுப்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்களை புதுக்கோட்டை சாலையோரத்தில் வைத்து  மண்பாண்ட தொழிலாளி ஆறுமுகம் விற்பனை செய்து வருகிறார்.
 இத்தொழில் குறித்து அவர் கூறியதாவது:
  நாள் முழுவதும் காத்திருந்தாலும், இதுவரை ஒரு பானை கூட விற்பனையாகவில்லை. தற்போது மண்பாண்டங்கள் செய்ய களிமண் கிடைக்காததால் குறிப்பிட்ட சில குடும்பத்தினர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.
வியாபாரம் குறைவு, தொழிலில் நஷ்டம், தேவையான மண் கிடைக்காமை, பொதுமக்களின் பயன்பாடு குறைவு போன்றவை காரணமாக இரண்டாம் தலைமுறையினர் இத்தொழிலுக்கு வரவில்லை. ஆகவே எங்களுடன் இந்த தொழில் நின்றுவிடும் என நினைக்கிறேன்.
 தற்போது இந்த பானைகள் செய்ய கடும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. காரணம் ஒரு மாட்டு வண்டி களிமண் ரூ.800 வரை உள்ளது. அதை கொண்டு வர மாட்டுவண்டிகள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் தை மாதம் வருவதற்கு முன்னரே மாட்டு வண்டியில் மண்பாண்டங்களை ஏற்றிக் கொண்டு கிராமம், கிராமமாக சென்று விற்பனை செய்வோம். அனைத்து பானைகளும் விற்பனையாகிவிடும். ஆனால் தற்போது நிலமை தலைகீழாகிவிட்டது.
மக்களிடையே மண்பாண்டத்தின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதால் தொழில் நலிவடைந்துவிட்டது. ஆரோக்கியம் கெடும் என்று தெரிந்தும் அலுமினியம் உள்ளிட்ட பாத்திரங்களையே தற்போதைய விரைவான வாழ்க்கை முறையில் பயன்படுத்துகின்றனர். இதனால், பல்வேறு வயிற்று உபாதைகள் ஏற்படுகின்றன. சாதம், குழம்பு, கூட்டு இவைகளை மண்சட்டிகளில் சமைத்தால் அதன் ருசியே  தனியாக இருக்கும். எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.
 பழைமையை மறந்து புதுமைக்குள் எந்திர வாழ்க்கையில் மக்களின் சராசரி வாழ்க்கை புகுந்துவிட்டது. விறகு அடுப்பு பயன்பாடு குறைந்து, கேஸ் அடுப்பு பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதுபோன்ற காரணங்களாலும் மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. கிராமத்தினரும் தற்போது எரிவாயு அடுப்புகளை பயன்படுத்துவதால் அதற்கு ஏற்ற பாத்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.
 ஆகவே பராம்பரியம் மிக்க இந்த மண்பாண்டத் தொழில் விரைவில் அழிவை சந்தித்து, காட்சிப்பொருளாக மாறும் நிலை உருவாகி வருகிறது என்றார்.
 முன்னோர்களின் வாழ்க்கை முறையில் முக்கியப் பங்கு வகித்த மண்பாண்டங்களை வாங்கி, அவற்றை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்பதே மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com