வழக்குரைஞர்களின் சிறந்த வாதமே நல்ல தீர்ப்புகளுக்கு வழிவகுக்கும்'

நீதிமன்ற வழக்குகளில் வழக்குரைஞர்கள் எடுத்துவைக்கும் வாத, பிரதிவாதங்களே வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்க வழிவகுக்கும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா

நீதிமன்ற வழக்குகளில் வழக்குரைஞர்கள் எடுத்துவைக்கும் வாத, பிரதிவாதங்களே வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்க வழிவகுக்கும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
புதுக்கோட்டை மாலையீட்டில் உள்ள தனியார் மண்டபத்தில், புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் ஆகிய இடங்களில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் புதிய நீதிமன்றங்கள் திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், நீதிமன்றக் கட்டடங்களைத் திறந்து வைத்து மேலும் அவர் பேசியது:
வரலாற்று சிறப்புமிக்க பல சிறப்பம்சங்களைக் கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த டாக்டர் முத்துலெட்சுமி, மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களான சாந்தி, சூர்யா, தற்போதைய லட்சுமணன் ஆகியோர் புதுகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்குரைஞர்கள், நீதிபதிகள், பொதுமக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். வழக்குகளை விரைந்து முடிப்பது நீதிபதிகள் கையில் இல்லை. வழக்குரைஞர்களின் கைகளிலே தான் உள்ளது. அவர்கள் சிறந்த வாத, பிரதிவாதங்களை எடுத்து வைக்கும்போது தான் மக்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
மூத்த வழக்குரைஞர்கள் இளைய வழக்குரைஞர்களுக்கு வழக்குகளை கையாள்வது குறித்து கற்றுத்தர வேண்டும். அதிகமாக வாய்தா வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்படும் போது மட்டுமே வழக்குகளில் வாய்தா வாங்க வேண்டும். 16 ஆண்டுகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றி இருக்கிறேன். எனவே, வழக்குரைஞர்களின் பிரச்னைகள் , கோரிக்கைகள் நன்கு அறிவேன். நீதிபதிகளும் பாரபட்சமற்றவர்களாக, தேச ஒற்றுமையுடனும் சமுதாய நோக்குடனும் செயல்பட வேண்டும் என்றார்.
விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், கோவிந்தராஜன் , புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தமிழ்ச்செல்வி,
குற்றவியல் தலைமை நீதிபதி நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com