"கர்ப்பிணிகள் மருத்துவர்களின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும்'

கர்ப்பிணித் தாய்மார்கள் மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என

கர்ப்பிணித் தாய்மார்கள் மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் கேட்டுக் கொண்டார்.
விராலிமலை, இலுப்பூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
விராலிமலையில் நடைபெற்ற விழாவை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேசியது: தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் நல்ல உடல்நலத்துடனும், சுகாதாரம் பேண ஒவ்வொரு ஆண்டும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், விராலிமலையில் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கும், இலுப்பூரில் 250 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 3,440 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
விழாவில் மஞ்சள், குங்குமம், வளையல், வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுடன் ஆரோக்கியம் சார்ந்த கையேடு வழங்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
பொன்னமராவதி: பொன்னமராவதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில்  கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொன்னமராவதி வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மா.சின்னதேவி தலைமை வகித்தார். ஊர் நல அலுவலர் மா.கமலம் முன்னிலை வகித்தார். 240 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு செய்யப்பட்டது. மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு தேங்காய், பழம், மஞ்சள், குங்குமம், விருந்து மற்றும் கர்ப்பக் கால பராமரிப்புகள் குறித்த கையேடு உள்ளிட்டவை  வழங்கப்பட்டது. தொடர்ந்து, கர்ப்பக்கால பராமரிப்புகள் குறித்த வினாடி, வினா நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கிராம சுகாதார செவிலியர் அ.நம்பு, மேற்பார்வையாளர்கள் சரசு, சாந்தி, விக்னேஸ்வரி, பெரியநாயகி, தமிழ்ச்செல்வி, சரோஜாதேவி, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கந்தர்வகோட்டை புதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை பா.ஆறுமுகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார். 
புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். முன்னதாக, அட்மா தலைவர் ஆர்.ரெங்கராஜன் வரவேற்றார்.
ஏழை கர்ப்பிணிப் பெண்கள் 140க்கும் அதிகமானோருக்கு வளைகாப்பு செய்யப்பட்டது. 
தொடர்ந்து, பழுதடைந்து காணப்படும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக கட்டடத்தை பழுதி நீக்கித் தர வேண்டுமென எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 
இதையடுத்து, அதனை நேரில் ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம், முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com