கொடிக்காலூரில் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறப்பு

தஞ்சாவூர் அருகே கொடிக்காலூரில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதால் சனிக்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனர்.

தஞ்சாவூர் அருகே கொடிக்காலூரில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதால் சனிக்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனர்.
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது. இதையடுத்து, இக்கடை கொடிக்காலூர் - கரந்தை சாலையில் உள்ள வயலில் அமைப்பதற்காகப் புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்களிடையே 10 நாள்களாக எதிர்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், இக்கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஏப். 23-ஆம் தேதி அப்பகுதி மக்கள் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், இக்கடையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும் மனு அளித்தனர்.
ஆனால், புதிய கட்டடம் கட்டப்படும் இடத்துக்கு அருகே தாற்காலிகமாகக் கொட்டகை அமைக்கப்பட்டு, விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் கரந்தை பிரதான சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறினர்.
இதன்படி, கொடிக்காலூரிலிருந்து சனிக்கிழமை காலை கரந்தை பிரதான சாலை நோக்கி சுமார் 100 பேர் புறப்பட்டனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், அதே இடத்திலேயே நின்று தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தது: இப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட்டால், பள்ளி மாணவர்கள், பெண்கள் இரவு நேரத்தில் கடந்து செல்ல முடியாது. இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே, இப்பகுதியில் மதுக்கடை அமைக்கப்படுவதைக் கைவிட்டு, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றனர்.
தகவலறிந்த தஞ்சாவூர் வட்டாட்சியர் ஆர். குருமூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இங்கு மதுக்கடை அமைக்கக் கூடாது என்றும், இக்கடையை விரைவில் இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இவர்களில் சிலரை அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட்ட அலுவலகத்துக்கு வட்டாட்சியர் அழைத்துச் சென்றார். வட்டாட்சியர், டாஸ்மாக் உதவி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, கலால் உதவி ஆணையர் இன்னாசிமுத்து மற்றும் கொடிக்காலூர் மக்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் 45 நாள்களுக்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com