"அனைத்து மொழிகளுக்கும் அடிப்படை தமிழே'

அனைத்து மொழிகளுக்கும் மூலமாக இருப்பது தமிழ் மொழியே என்றார் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் இராசபாண்டியன்.

அனைத்து மொழிகளுக்கும் மூலமாக இருப்பது தமிழ் மொழியே என்றார் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் இராசபாண்டியன்.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் தமிழாய்வுத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற "தொல்காப்பியரின் உருபனியற் கோட்பாடு' என்ற தலைப்பிலான மூன்று நாள் கருத்தரங்கத்தின்
தொடக்க விழாவில் "மொழியும், மொழியிலும்' என்ற தலைப்பில் அவர் பேசியது:
அனைத்து மொழிகளிலும் மொழி என்றால் பேசுதல் என்ற பொருளில்தான் உள்ளது. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என தனது முதல் குறளில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
அவர் கூறியதுபோல, அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல்,
ஆங்கிலத்திலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளது. ஆங்கிலத்தில் ஆப்பிள் என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்து அகரத்தைத்தான் குறிக்கிறது.
குமரி கண்டம் என்பது வடக்கே வடவேங்கடம், தெற்கே தென் குமரி என அதன் எல்லைக் குறிப்பிடப்படுகிறது. குமரி என்பது இப்போது உள்ள கன்னியாகுமரி அல்ல. அதற்கு அப்பால் தெற்கே குமரி
மலை இருந்தது. அதுவரை தமிழ் இன மக்கள் பரவி இருந்ததையே காட்டுகிறது.
இந்திய மொழிகளில் தமிழ்தான் தனித்தன்மை உடையது. அதனால்தான் தமிழை மத்திய அரசு, செம்மொழியாக அறிவித்தது. அதன் பிறகுதான் சம்ஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழில்
வடமொழித் தாக்கம் இருப்பதாகக் கூறுவர். ஆனால், வடமொழியில்தான் தமிழின்தாக்கம் இருக்கிறது. உதாரணமாக அகம் பிரம்மாஸ்மி என்ற பாடலில் அகம் என்பது தமிழ்ச் சொல். எனவே, அகம் என்ற
சொல், தமிழில் இருந்துதான் சம்ஸ்கிருதத்துக்கு சென்றிருக்க வேண்டும். இதேபோல, கலை, தலை என்கிற தமிழ்ச் சொற்களுக்கு கலா, தலா என சம்ஸ்கிருதத்தில் குறிப்பிடப்படுகிறது. ரிக் வேதம் கி.மு.
1500-இல் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கிருஷ்ணதேவராயர் காலத்தில்தான் எழுத்து வடிவில் ரிக் வேதம் வந்தது. அதுவரை ரிக் வேதம் வாய்மொழியாகத்தான் இருந்தது.
ஆனால், கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியம் எழுதப்பட்ட இலக்கியமாக இருந்தது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, உலகளாவிய நிலையில் மொழியை அனைத்துப்
பகுதிகளுக்கும் குமரி கண்டத்தில் இருந்து பரப்பி வளர்த்தவர்கள் தமிழர்களே என தெரியவருகிறது. எனவே, அனைத்து மொழிகளுக்கும் மூலமாக இருப்பது தமிழே என்றார் இராசபாண்டியன். கல்லூரி
முதல்வர் (பொறுப்பு) தி. அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்காப்பியர் இருக்கை தகைசால் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, கருத்தரங்க
ஒருங்கிணைப்பாளர் மா. கோவிந்தராசு, தமிழ்த் துறைத் தலைவர் து. ரோசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

"செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு விரைவில் நிரந்தர இயக்குநர்'
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் இராசபாண்டியன் கூறியதாவது:
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு முழுநேர இயக்குநரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.இன்னும், மூன்று
மாதங்களில் நிரந்தர இயக்குநர் நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இந்நிறுவனத்துக்கு மத்திய அரசின் ரூ. 24.5 கோடி நிதியுதவியுடன் 4 அடுக்குகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு
வருகிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை பயன்படுத்தாமல் திரும்ப அனுப்பப்படுவதாக கூறுவது முற்றிலும் தவறு.
 பிரெய்லி வடிவில் திருக்குறள்: தற்போது, மத்திய அரசு நிதியுதவியுடன் திருக்குறளை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், இதுவரை தெலுங்கு,
கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி, மணிப்பூரி ஆகிய 5 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட்டுவிட்டது. மேலும், அரபு, வாக்ரிபோலி (நரிக்குறவர் மொழி) ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடத்
தயார் நிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, பார்வையற்ற தமிழ் மாணவர்களுக்காக பிரெய்லி எழுத்து வடிவில் திருக்குறள் வெளியிடுவதற்கான தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com