"வங்கிகளில் வாராக்கடன் ரூ. 15 லட்சம் கோடியை கடந்துவிட்டது'

வங்கிகளில் வாராக்கடன் அளவு ரூ. 15 லட்சம் கோடியைக் கடந்துவிட்டது என்றார் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பு) பொதுச் செயலர் இ. அருணாசலம்.

வங்கிகளில் வாராக்கடன் அளவு ரூ. 15 லட்சம் கோடியைக் கடந்துவிட்டது என்றார் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பு) பொதுச் செயலர் இ. அருணாசலம்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
வங்கிகளில் தற்போது ரூ. 110 லட்சம் கோடி வைப்புத்தொகை உள்ளது.  வங்கிகள் சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கும், வங்கிகளை இணைப்பதற்கும் அரசு முயற்சித்து வருகிறது. வங்கிகளில் வராக்கடன்களின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து, தற்போது ரூ. 15 லட்சம் கோடியைக் கடந்துவிட்டது. இதில்,  12 கார்பரேட் நிறுவனங்கள் ரூ. 2.53 லட்சம் கோடி வாராக்கடன் நிலுவை வைத்துள்ளது. கார்பரேட் நிறுவனங்களிடம் கடன் தொகையை வசூலிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  அவர்கள் மீது குற்ற வழக்கு தொடுக்க வேண்டும். தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வராக்கடனை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 
   இந்நிலையில், ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்களுக்கு ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, டிச. 27-ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. தஞ்சாவூரில் இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்க மாநாடு சனிக்கிழமை (டிச.9) நடைபெறவுள்ளது. இதில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கப் பொதுச்செயலர் சி.எச். வெங்கடாசலம், பொதுச் செயலர் எஸ். நாகராஜன், ஏஐடியுசி த. ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார் அருணாசலம்.  பேட்டியின்போது, ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கே. அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com