தஞ்சாவூரில் மக்கள் குறைதீர் கூட்டம்: விளைபொருள்களுக்கு நியாயமான விலை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் காவிரிப் படுகைப் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் மனு அளித்தனர்.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் காவிரிப் படுகைப் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் மனு அளித்தனர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோ. திருநாவுக்கரசு மற்றும் அரங்க. குணசேகரன், ஜெய்சங்கர், அருண்சோரி, துரை. மதிவாணன், ஜெய்னுலாவுதீன் உள்ளிட்டோர் அளித்த மனு:
காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நெல், கரும்பு, பருத்தி, தானிய வகைகள் உள்ளிட்ட விளைபொருள்களுக்கு செலவிடும் தொகைக்கு ஏற்ப விற்பனை விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை.
எனவே, நெல் குவிண்டாலுக்கு ரூ. 6 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ. 6,950-ம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
எவ்வித உற்பத்தியிலும் ஈடுபடாத மத்திய, மாநில அரசு, பொதுத் துறை ஊழியர்களின் மாதாந்திர, ஆண்டு ஊதியத்தை எடுத்துக் கொண்டால், உற்பத்தியில் ஈடுபடுகிற விவசாயிகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. எனவே விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்
அனுமதி கோரி தொழிலாளர்கள் அளித்த மனு: கும்பகோணம் அருகேயுள்ள கொத்தங்குடியில் பல ஆண்டு காலமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்காக மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் இருந்து 50-க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் எடுத்து வந்தனர். தற்போது மணல் அள்ள பொதுப் பணித் துறை மூலம் அனுமதி சீட்டு வழங்கப்படுவதில்லை. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். கடுமையான வறட்சியால் விவசாய தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாட்டு வண்டியில் மணல் அள்ளி பிழைப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கொல்லாங்கரையில் நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் குளறுபடி
கொல்லாங்கரை கிராமத்தில் நூறு நாள் வேலை முறையாக வழங்கப்படுவதில்லை. பதிவேட்டில் வேலைக்கு வருபவர்களுக்கு நாள் குறைவாகவும், வராதவர்களுக்கு நாள்கள் அதிகமாகவும் பதிவு செய்யப்படுகிறது. ஊதியமும் குறைவாக வழங்கப்படுகிறது. எனவே, தற்போது உள்ள பணி தளப் பொறுப்பாளரை மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

முகமது பந்தர் கிராமத்தில் டாஸ்மாக் கூடாது
முகமது பந்தர் கிராமத்தில் ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. குடமுருட்டி ஆற்றின் கீழ்கரையில் ஹத்திஜா குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்படவுள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே, இந்த மதுக்கடை அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com